2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த ஆண்டு, ஜூலை 23-ம் தேதி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பாதுகாப்பான முறையில் ஒலிம்பிக் தொடரை நடத்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், வரும் ஜூலை 17-ம் தேதி ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்ற இந்திய வீரர் வீராங்கனைகள் டோக்கியோ செல்ல இருக்கின்றனர். 18 போட்டிகளைச் சேர்ந்த 126 வீரர் வீராங்கனைகள் இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல உள்ளனர். அதை முன்னிட்டு, பிரதமர் மோடி இன்று கானொளி காட்சி வாயிலாக இந்திய அணியைச் சந்தித்து உரையாடினார்.
சர்வதேச வில்வித்தை தொடரில், தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை தீபிகா குமாரிக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டு தனது உரையாடலை தொடங்கினார் பிரதமர் மோடி. இந்த உரையாடலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் சரத் கமல், துப்பாகி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து, குத்துச்சண்டை வீராங்கனை மேர் கோம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, ”எதிர்பார்ப்புகளுக்குள் சிக்கிக் கொள்ளாதீர்கள், உங்களின் சிறப்பான முயற்சியை வெளிப்படுத்துங்கள்” என ஒலிம்பிக் வீரர் வீராங்கனைகளுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும், மேரி கோமிடம் பேசும்போது யாரை உங்களது முன்மாதிரியாக பார்க்கிறீர்கள் என கேட்டார். அதற்கு மேரி கோம், “முகமது அலிதான் இன்ஸ்பிரேஷன்” என பதிலளித்தார்.
இளவேனில் வாலறிவன் பேசும்போது, “சிறிய தொடர்களில் முதலில் பங்கேற்க தொடங்கி இப்போது ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டைப் பொருத்தவரை, ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் தமிழ்நாடு வீரர்களுக்கு 3 கோடி ரூபாயும், வெள்ளி வெல்லும் வீரர்களுக்கு 2 கோடி ரூபாயும், வெண்கலம் வெல்லும் வீரர்களுக்கு 1 கோடி ரூபாயும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 வீரர்கள், ஒலிம்பிக் 4*400 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் பங்கேற்க தேர்ச்சி பெற்றுள்ளனர். கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்பதற்காக ரேவதி வீரமணி, தனலெட்சுமி, சுபா வெங்கடேசன் ஆகியோரும், ஆண்கள் தொடர் ஓட்டத்தில் பங்கேற்பதற்காக ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.