Paris Paralympics 2024: தீவிரவாத தாக்குதலில் காலை இழந்த முன்னாள் இந்திய ராணுவ வீரர் ஹோகாடோ செமா, பாராலிம்பிக்கில் குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
வெண்கலப் பதக்கம் வென்ற முன்னாள் ராணுவ வீரர்:
பாரிஸ் பாராலிம்பிக்ஸ் 2024ல் இந்தியாவின் ஹோகாடோ சீமா வெண்கலப் பதக்கம் வென்றார். F57 பிரிவு குண்டு எறிதல் இறுதிப் போட்டியில், தனது சிறந்த எறிதலை 14.65 மீட்டர் என பதிவு செய்து மூன்றாவது இடத்தைப் பிடித்து இந்தியாவிற்கான வெண்கலத்தை பதக்கத்தை வென்றார். நாகாலாந்து மாநிலம் திமாபூரைச் சேர்ந்த 40 வயதான இந்த முன்னாள் ராணுவ வீரர், கடந்த ஆண்டு ஹாங்சோ பாரா விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஹோகாடோ சீமாவின் முயற்சிகள்
பாராலிம்பிக்ஸில் இந்தியக் குழுவின் ஒரு பகுதியாக இருந்த நாகாலாந்தைச் சேர்ந்த ஒரே தடகள வீரர் ஹோகாடோ சீமா. இறுதிப்போட்டியில் தனது இரண்டாவது எறிதலில் 14 மீட்டர் குறியைத் தொட்டார், பின்னர் 14.40 மீட்டர் தூரத்தைத் தாண்டி முன்னேறினார். இருப்பினும், சீமா தனது நான்காவது எறிதலில் 14.49 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து வெண்கலம் வென்றார். 2002 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோக்பாலில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது கண்ணிவெடி வெடித்ததில் சீமா தனது இடது காலை இழந்தார்.
யார் இந்த ஹோகாடோ சீமா?
இந்திய ராணுவத்தின் 9 அசாம் படைப்பிரிவில் ஹவில்தாராக பணியாற்றி வந்தார். இந்நிலையில்,கடந்த 2002 ஆம் ஆண்டு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கையின்போது, கண்ணிவெடி வெடித்ததால் தனது காலை இழந்தார். அதன் பிறகு, 32 வயதில், அவர் ஷாட்புட் விளையாட்டை விளையாடத் தொடங்கினார். புனேவைச் சேர்ந்த செயற்கை மூட்டு மையத்தில் தனது உடற்தகுதியைக் கண்காணித்து மூத்த ராணுவ அதிகாரி ஒருவரின் ஊக்கப்படுத்தலால் சீமா குண்டு எறிதல் விளையாட்டில் கவனம் செலுத்த தொடங்கினார். 2016 ஆம் ஆண்டு தனது 32வது வயதில் விளையாட்டில் ஈடுபட்டு தேசிய அளவில் தங்கம் வென்றார். F57 வகை என்பது ஒரு காலில் மட்டுப்படுத்தப்பட்ட இயக்கம், இரண்டு கால்களிலும் மிதமான அல்லது முழுமையாக இயக்கம் இல்லாத கள விளையாட்டு வீரர்களுக்கானது.
போட்டியின் முடிவுகள்:
இந்த போட்டியில், இரண்டு முறை பாரா உலக சாம்பியனும், ஹாங்சோ பாரா கேம்ஸ் தங்கப் பதக்கம் வென்றவருமான ஈரானின் 31 வயதான யாசின் கோஸ்ரவி, 15.96 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். அவர் தனது சொந்த உலக சாதனையான 16.01 மீட்டர்களை வெறும் ஐந்து சென்டிமீட்டர்களால் தவறவிட்டார். பிரேசிலின் தியாகோ டோஸ் சாண்டோஸ் 15.06 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளி வென்றார். இந்த நிகழ்வில் மற்றொரு இந்திய வீரரும், ஹாங்சோ பாரா விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான ராணா சோமன் 14.07 மீட்டர் தூரம் எறிந்து ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். இதனால் பதக்க வாய்ப்பை தவறவிட்டார்.