Paris Paralympics 2024: பாரிஸ் பாராலிம்பிக்கில் இந்திய வீரர் பிரவீன் குமார் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.


56 ஆண்டுகளில் முதல்முறை:


டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் குமார், பாரிஸ் பாராலிம்பிக்ஸ் 2024 நேற்று ஆடவர் உயரம் தாண்டுதல் T64 நிகழ்வில் தங்கப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் ஆசிய அளவிளான சாதனையை முறியடித்துள்ளார். 21 வயதான பாரா-தடகள வீரர் இறுதிப் போட்டியில் 2.08 மீ உயரம் தாண்டி அமெரிக்காவின் டெரெக் லோசிடென்ட் (2.06 மீ) மற்றும் உஸ்பெகிஸ்தானின் டெமுர்பெக் கியாசோவ் (2.03 மீ) ஆகியோரை , பின்னுக்கு தள்ளி பதக்கத்தை தனதாக்கினார். இது பாரிஸ் பாராலிம்பிக்ஸில் இந்தியாவின் ஆறாவது தங்கப் பதக்கம் ஆகும். இதன் மூலம் இந்தியாவின் 56 ஆண்டுகால பாராலிம்பிக் வரலாற்றில்,  ஒரு எடிஷனில் இந்தியா வென்ற அதிகபட்சதங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை இதுவாகும். முன்னதாக, டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியா ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றதே அதிகபட்சமாக இருந்தது.


T64 பிரிவு என்றால் என்ன?


T64 என்பது ஒரு கீழ் காலில் மிதமான இயக்கம் அல்லது முழங்காலுக்கு கீழே ஒன்று அல்லது இரண்டு கால்கள் இல்லாத விளையாட்டு வீரர்களுக்கானது. T44, இதன் கீழ் பிரவீன் வகைப்படுத்தப்பட்டுள்ளது, ஒரு கீழ் காலில் குறைந்த அல்லது மிதமான அளவில் இயக்கம் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கானது. பிறவியிலேயே உள்ள அவரது குறைபாடு, அவரது இடுப்பை இடது காலுடன் இணைக்கும் எலும்புகளை பாதிக்கிறது. ஷரத் குமார் மற்றும் மாரியப்பன் ஆகியோருக்குப் பிறகு, பாரிஸ் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற மூன்றாவது உயரம் தாண்டும் இந்திய வீரர் இவராவார். பிரவீன் குமார் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆகும்.






இந்தியா வென்ற 6 தங்கப் பதக்கங்கள்:



  • சுமித் ஆண்டில் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார்

  • நிதேஷ் குமார் ஆடவர் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றார்

  • அவனி லேகரா மகளிர் 10மீஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்றார்

  • பிரவீன் குமார் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்


பதக்கப் பட்டியல் நிலவரம்:


இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி மற்றும் 12 வெண்கலம் என, மொத்தம் 27 பதக்கங்களுடன், பாரிஸ் பாராலிம்பிக் பதக்கப் பட்டியலில் 17வது இடத்தில் உள்ளது. 83 தங்கம் உட்பட 188 பதக்கங்களுடன் சீனா முதலிடத்திலும், 42 தங்கம் உட்பட 100 பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், 31 தங்கம் உட்பட 86 பதக்கங்களுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளது.