Paris Olympics 2024: பாரிஸில் ஒலிம்பிக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோ எடைப்பிரிவில் இன்று தங்கத்திற்கான அமெரிக்க வீராங்கனையுடன் சாராவுடன் மோதுவதாக இருந்தது. ஆனால், போட்டிக்குரிய எடையை காட்டிலும் 100 கிராம் அதிகளவு இருப்பதாக கூறி வினேஷ் போகத் தகுதி நீக்கம்(Vinesh Phogat Disqualified) செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பாலின சோதனையில் தோல்வி:
இந்திய வீராங்கனை வினேஷ் போகத்திற்கு விதிகளை மிக கடுமையாக பின்பற்றிய ஒலிம்பிக் கமிட்டி, அதே விதிகளை தளர்த்தி அல்ஜீரிய மற்றும் சீன வீராங்கனைகள் இருவரை பங்கேற்க அனுமதித்திருப்பது பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. வீராங்கனைகள் பலருக்கும் போட்டிகளில் பங்கேற்கும்போது பாலின பரிசோதனை செய்வது வழக்கம். இது குரோமோசோம்களின் எண்ணிக்கை அடிப்படையில் முடிவுகள் வெளியாகும்.
அந்த வகையில், நடப்பு ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை பிரிவில் அல்ஜீரிய வீராங்கனை இமானே கேலிஃப்(Imane Khelif) மற்றும் சீனாவின் லின் யூ டிங்(Lin Yu-ting) இருவரும் பங்கேற்று ஆடி வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்தாண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் பாலின பரிசோதனையில் தோல்வி அடைந்தவர்கள்.
ஒலிம்பிக்கில் வாய்ப்பு:
இவர்களை நடப்பு ஒலிம்பிக்கில் போட்டியில் பங்கேற்க அனுமதித்தது முதலே தொடர்ந்து சர்ச்சைகள் இருந்து வருகிறது. இத்தாலி வீராங்கனையுடனான மோதலில் பாலின சோதனையில் தோல்வி அடைந்த இமானே கேலிஃப் விடுத்த குத்தில் இத்தாலி வீராங்கனை கார்னியின் மூக்கு உடைந்தது. வெறும் 46 நொடிகளில் இந்த போட்டி முடிந்தது. ஒலிம்பிக் வரலாற்றில் வெறும் 46 நொடிகளில் முடிந்தது இதுவே ஆகும்.
அதேபோல, டெல்லியில் கடந்தாண்டு உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப் பதக்கத்திற்கான இறுதி மோதல் நடைபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு யங் லியூ பாலின பரிசோதனையில் தோல்வி அடைந்ததால் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக லின் ஏதும் விளக்கமும் அளிக்கவில்லை.
என்ன நியாயம்?
சர்வதேச குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் தொடரில் பாலின பரிசோதனையில் தோல்வி அடைந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட அல்ஜீரிய மற்றும் சீன வீராங்கனை இருவருக்கும் இந்த ஒலிம்பிக்கில் விளையாட அனுமதி வழங்கப்பட்டு அவர்கள் ஆடி வரும் சூழலில், இந்திய வீராங்கனைக்கு 100 கிராம் எடை அதிகமாக இருந்ததாக காரணம் கூறி அவரை தகுதிநீக்கம் செய்திருப்பது மிகவும் மோசமான செயலாக ரசிகர்களாலும், விளையாட்டு வீரர்களாலும் கருதப்படுகிறது. குறிப்பாக, இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தின் பயிற்சியாளர் எடையை குறைக்க கூடுதல் அவகாசம் தருமாறு கேட்டனர். ஆனால், ஒலிம்பிக் கமிட்டி தர மறுத்துவிட்டது.
இந்தளவு விதிகளை கடுமையாக பின்பற்றும் ஒலிம்பிக் கமிட்டி பாலின பரிசோதனையில் தோல்வி அடைந்த இரண்டு வீராங்கனைகளை தொடர்ந்து விளையாட அனுமதித்து வருகிறது. இது எந்த வகையில் நியாயம்? என்று வீரர்களும், ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். வினேஷ் போகத் பா.ஜ.க.வின் முன்னாள் எம்.பி.க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால், வினேஷ் போகத்திற்கு எதிராக ஏதேனும் சதி ஏதும் நடந்துள்ளதா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளது.