உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படுவது ஒலிம்பிக். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த விளையாட்டு திருவிழா உலகெங்கும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும்.


நாளை தொடங்கும் ஒலிம்பிக் திருவிழா:


இந்த மிகப்பெரிய ஒலிம்பிக் திருவிழா நாளை பிரான்ஸ் நாட்டின் அழகிய பாரீஸ் நகரத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. 2024ம் ஆண்டு பிறந்தது முதலே பாரீஸ் நகரத்தில் ஒலிம்பிக் கொண்டாட்டம் பிறக்கத் தொடங்கியது. ஒலிம்பிக் கிராமத்தை அமைக்கும் பணிகளில் பிரான்ஸ் அரசு கடந்தாண்டு முதலே தீவிரமாக ஈடுபட்டு வந்தது.


ஒலிம்பிக் திருவிழா தொடங்க உள்ள நிலையில், உலகெங்கும் உள்ள விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் ஒலிம்பிக் கிராமத்தில் குவிந்து வருகின்றனர். நாளை தொடங்க உள்ள ஒலிம்பிக் தொடரில் மொத்தம் 206 நாடுகள் பங்கேற்க உள்ளன.


206 நாடுகள் பங்கேற்பு:


206 நாடுகளின் சார்பில் மொத்தம் 2 ஆயிரத்து 900 வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர். ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த தொடக்க விழாவில் உலக பிரபலங்கள் பங்கேற்று விழாவை சிறப்பாக தொடங்கி வைக்க உள்ளனர். நீச்சல், ஓட்டப்பந்தயம், கூடைப்பந்து, பேட்மிண்டன், குத்துச்சண்டை, மல்யுத்தம், மராத்தான், குதிரையேற்றம், ஹாக்கி, கோல்ஃப், ஜிம்னாஸ்டிக், படகுப்போட்டி, பாய்மரப்படகுப் போட்டி, வாலிபால், பளுதூக்குதல், டேக்வோண்டோ, துப்பாக்கிச்சுடுதல், ரக்பி, நீளம் தாண்டுதல், தடை ஓட்டம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் என பல போட்டிகள் நடைபெற உள்ளது.


நடப்பு ஒலிம்பிக் தொடரில் ப்ரேக்கிங் டான்ஸ் முதன்முறையாக போட்டிகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஒலிம்பிக் தொடரில் ஆப்ரிக்காவில் இருந்து 54 நாடுகளும், ஐரோப்பாவில் இருந்து 48 நாடுகளும், அமெரிக்க கண்டத்தில் இருந்து 41 நாடுகளும், ஆசியாவில் இருந்து 44 நாடுகளும் பங்கேற்கின்றனர்.


களைகட்டிய பாரீஸ்:


வழக்கமாக ஒலிம்பிக் தொடரில் பதக்கப்பட்டியலில் எப்போதும் முதலிடத்தை பிடிப்பதில் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே கடும் போட்டி நடைபெறும். இந்த முறையும் பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடிப்பதற்கு அமெரிக்கா, சீனா இடையே போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா சார்பில் மொத்தம் 116 வீரர்கள், வீராங்கனைகள் இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர். 


உலகின் பல நாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் ஒலிம்பிக்கில் பங்கேற்க இருப்பதாலும், லட்சக்கணக்கான ரசிகர்கள் இதை பார்ப்பதற்காக வர உள்ளதாலும் பாரீஸ் நகரம் முழுவதும் பல மடங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை ஒலிம்பிக் தொடங்க உள்ளதால் பாரீஸ் நகரமே களைகட்டி காணப்படுகிறது.