2024 டி20 உலகக் கோப்பை முடிந்த கையோடு பாரீஸ் விளையாட்டு போட்டிகள் வருகின்ற ஜுலை 26ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இந்தநிலையில், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த துப்பாக்கிச்சுடுதல் வீரர் பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றார். ஆடவர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளதாக தேசிய துப்பாக்கிச்சுடுதல் சங்கம் அறிவித்துள்ளது. 


பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள பிருத்விராஜ் தொண்டைமான் தெரிவிக்கையில், “இந்தியாவுக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்பது எனது கனவு. கடந்த முறை நூலிழையில் வாய்ப்பிழந்த நிலையில், தற்போது தகுதி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்துள்ளார். 






மேலும், அனுபவம் வாய்ந்த துப்பாக்கிச்சுடுதல் வீரர் பிருத்விராஜ் தொண்டைமான் வரவரிக்கும் பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஷாட்கன் அணிக்கு தலைமை தாங்குகிறார். தேசிய துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பு இன்று பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான 5 பேர் கொண்ட அணியை அறிவித்தது. இதில், ஆண்களுக்கான ட்ராப் போட்டியில் பிருத்விராஜ் தொண்டைமான், பெண்களுக்கான ட்ராப் போட்டியில் ராஜேஸ்வரி தகுதி பெற்றுள்ளன. ஆனந்த்ஜீத் சிங் நருகா இந்தியாவின் ஒரே ஆண்களுக்கான ஸ்கீட் ஷீட்டராகவும், அதேசமயம், பெண்கள் ஸ்கீட்டில் ரைசா தில்லான் மற்றும் மகேஸ்வரி சவுகான் ஆகியோர் தகுதிச் பெற்றுள்ளன. 


பாரீஸ் ஒலிம்பிக்கிற்கான இந்திய ஷாட்கன் அணி:


ட்ராப்:


ஆண்கள்: பிருத்விராஜ் தொண்டைமான்
பெண்கள்: ராஜேஸ்வரி குமாரி


ஸ்கீட்:


ஆண்கள்: அனந்த்ஜீத் சிங் நருகா
பெண்கள்: மகேஸ்வரி சவுகான், ரைசா தில்லான்


பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டால், ஸ்ரேயாசி சிங்கும் அணியில் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஐந்து பேருக்கும் முதல் ஒலிம்பிக் இது: 


மகேஸ்வரி மற்றும் ஆனந்த்ஜீத் சிங் நருகா  ஸ்கீட் கலப்பு குழு பிரிவில் ஒரே இந்திய ஜோடியாக இடம் பெறுகிறார்கள். தற்செயலாக பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதிபெற்ற 5 பேரும் தங்கள் முதல் ஒலிம்பிக் போட்டிகளில் களமிறங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுகுறித்து இந்திய தேசிய துப்பாக்கின் சுடுதல் சங்கத்தின் பொதுச்செயலாளர் சுல்தான் சிங் கூறுகையில், “ பாரீஸ் ஒலிம்பிக்கில் தகுதி பெறுவதற்கான இடங்களுக்கு கடுமையான போட்டி நிலவியது. சமீபத்தில் நடந்து முடிந்த லோனாடோ உலகக் கோப்பையில் சில துப்பாக்கி சுடும் வீரர்கள் பதக்கம் பெற்றிருந்தால் நிலைமை மாறியிருக்கலாம். ஆனால், எங்களிடம் ஒரு சிறந்த ஷாட்கன் அணி இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். வருகின்ற பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி பதக்கம் செல்லும் என்று நம்புகிறோம். 


பெண்கள் ட்ராப் ஷூட்டர் ஸ்ரேயாசி சிங்கின் பெயரும் தேர்வுக் குழுவால் அங்கரிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோடி இந்திய தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கம், சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக்கு கடிதம் எழுதியுள்ளோம். இந்த சூழ்நிலையில், சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டிடம் இருந்து தேவையான அனுமதியைப் பெற்ற பின்னரே, அவரது பெயரை வெளியிடுவோம்” என்று தெரிவித்தார்.