ஒலிம்பிக் தொடர்:
பாரீஸ் ஒலிம்பிக் மற்றும் போட்டிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்க உள்ளது. அந்தவகையில் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் இந்த முறை 10,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். 329 நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. 32-க்கும் அதிகமான விளையாட்டுகள் நடக்க இருக்கின்றன.
இரண்டு முறை பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை:
இந்நிலையில் இந்தியாவிற்காக இரண்டு முறை பதக்கம் வென்ற வீராங்கனை பி.வி.சிந்து. இவர் இம்முறையும் ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்வார் என பெரும் நம்பிக்கை இந்திய மக்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில் இவர் தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
இந்தியா இதுவரை 24 முறை ஒலிம்பில் தொடரில் பங்கேற்று இருக்கிறது. அதில் 10 தங்கம், 9 வெள்ளி மற்றும் 16 வெண்கலப்பதக்கங்கள் என 35 பதக்கங்களை மட்டுமே இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வென்றிருக்கின்றனர். இதில் இந்தியாவிற்காக அதிக பதக்கங்களை வென்ற வீராங்கனை என்ற பெருமையை வைத்திருப்பவர் பி.வி.சிந்து.
யார் இந்த பி.வி.சிந்து?
புசர்லா வெங்கட சிந்து என்று அழைக்கப்படும் பி.வி.சிந்து ஒரு தொழில்முறை பேட்மிண்டன் வீராங்கனை. ஜூலை 5 ஆம் தேதி, ஹைதராபாத்தில் (ஆந்திரப் பிரதேசம்) பிறந்த சிந்து, ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் மற்றும் BWF உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி ஆவார்.
பல பதக்கங்களை வென்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். பத்மஸ்ரீ, பத்ம பூஷன், அர்ஜுனா விருது மற்றும் பல விருதுகளையும் இந்திய அரசு அவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது.
குடும்ப பின்னணி:
- சிந்துவின் பெற்றோர்கள் தேசிய அளவிலான கைப்பந்து வீரர்கள்.
- 1986 சியோல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இவரது தந்தை பிவி ரமணாவின் அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
- இவரது தந்தைக்கு 2000 ஆம் ஆண்டு அர்ஜுனா விருதும் வழங்கப்பட்டுள்ளது.
- பி.வி.சிந்துவின் பெற்றோர்கள் இவருக்கு சிறுவயதில் இருந்தே உத்வேகம் அளித்து வந்திருக்கிறார்கள்.
- இவரது பெற்றோர்கள் கைப்பந்து வீரர்களாக இருந்தாலும் சிறு வயதில் இருந்தே சிந்துவிற்கு மிகவும் பிடித்த விளையாட்டு பேட்மிண்டன் தான்.
- பேட்மிண்டன் மீது அவர் கொண்ட ஆர்வம் தான் ஒரு சிறந்த வீராங்கனையாக இவரை மாற்றியது.
கல்வி:
ஹைதராபாத்தில் உள்ள ஆக்சிலியம் உயர்நிலைப் பள்ளியிலும், ஹைதராபாத்தில் உள்ள செயின்ட் ஆன்ஸ் மகளிர் கல்லூரியிலும் தனது பள்ளிப் படிப்பை பி.வி.சிந்து முடித்திருக்கிறார்.
பேட்மிண்டன் வாழ்க்கை:
தன்னுடைய எட்டு வயதிலேயே பேட்மிண்டன் விளையாட தொடங்கிய சிந்து, செகந்திராபாத்தில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் பேட்மிண்டன் விதிகள் மற்றும் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டார். பேட்மிண்டன் மீது இவர் கொண்ட தீராக்காதலுக்கு ஒரு எடுத்துக்காட்டு தன்னுடைய சிறுவயதில் சொந்த ஊரிலிருந்து மைதானத்திற்கு கிட்டத்தட்ட 54 கிலோ மீட்டர் தினமும் பயணம் செய்திருக்கிறார்.
அதன்பின்னர், கோபிசந்த் பேட்மிண்டன் அகாடமியில் சேர்ந்தார். இங்கு சிறப்பான பயிற்சிகளை மேற்கொண்டார். அதன்படி,உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் நான்கு பதக்கங்கள் மற்றும் ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் வென்று இந்திய நாட்டிற்கு பெருமையை சேர்த்துள்ளார். அந்தவகையில் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் அதிக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீராங்கனை என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.
ஒலிம்பிக்:
டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சிந்து வெண்கலம் வென்றார் .
2016 ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக்கில் சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
வரலாற்றில் நிலைத்து நிற்கும் சிந்துவின் மிகப்பெரிய சாதனைகள்:
- 2019 ஆம் ஆண்டு BWF உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண்.
- 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்.
- 2018 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுகளில் ஒரே போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்றவர்.
- 2017 இல் BWF உலக டூர் பைனல்ஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர்.
- 2016 ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்.
- 2015 ஆம் ஆண்டு டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸில் வெள்ளி வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.