எத்தனையோ விளையாட்டுகள் இருந்தாலும் ஒலிம்பிக் தொடரில் தங்கம் வெல்வது தான் விளையாட்டின் மூலம் ஒரு தேசத்திற்கு கிடைக்கும் பெருமையாக பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட பெருமையை தன் நெஞ்சில் சுமந்து கனவாய் இருந்த அந்த பெரும் கனாவை நினைவாக மற்றியவர் ஈட்டி எறிதல் மூலம் தங்கம் வென்று ஒட்டு மொத்த நாட்டு மக்கள் நெஞ்சிலும் ஆழமாய் பதிந்தவர். ஈட்டி எறிதலின் நாயகன், இவன் வந்தால் நம் நாட்டிற்கு நிச்சயம் ஒரு பதக்கம் கிடைக்கும் என்ற எண்ணத்தை எல்லோர் மனதிலும் உருவாக்கியவன், இந்தியாவின் செல்லப்பிள்ளை நீரஜ் சோப்ரா.


ஹரியானா மாநிலம் பானிபட் அருகே உள்ள கந்த்ரா என்றா சிறிய கிராமத்தில் டிசம்பர் 24, 1997 ஆம் ஆண்டு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் நீரஜ் சோப்ரா. சண்டிகரில் உள்ள தயானந்த் ஆங்கிலோ - வேதிக் கல்லூரியில் பட்டம் பெற்றார். இவரது தாய் சரோஜ் தேவி இல்லத்தரசி மற்றும் தந்தை சதீஸ் குமார்.
 
‘குண்டா இருக்க விளையாட வெளியே போ’ 


சிறுவயதில் நீரஜ் சோப்ரா எடை மிகுந்த குழந்தையாக இருந்திருக்கிறார். அதனால் நமது வீட்டில் எல்லாம் எப்படி சற்று எடை அதிகம் உள்ள குழந்தைகளை வெளியில் சென்று விளையாட வற்புறுத்துவோமோ, அதைப் போலத்தான் நீரஜ் சோப்ராவின் குடும்பத்தினரும். குடும்பத்தினரின் வற்புறத்தலால் மைதானத்திற்கு சென்றார். அதிகபட்சம் விளையாட்டு என்றாலே கிரிக்கெட், கால்பந்தை செலக்ட் செய்யும் குழந்தைகளுக்கு மத்தியில் நீரஜ் வித்தியாசமாக ஈட்டி எறிதலை தேர்வு செய்தார்.


பனிபட்டில் தொடங்கிய பயணம்:


பனிப்பட்டில் தொடங்கிய பயணம் தான் டோக்கியோவரை எதிரொளித்தது. தொடர் பயிற்சியில் ஈடுபட்ட நீரஜ் சோப்ரா தன்னுடைய 23 வது வயதில் பஞ்ச்குலாவில் உள்ள தவ் தேவி லாக் விளையாட்டு வளாகத்தில் பயிற்சிகளை மேற்கொண்டார். அப்போது அவருக்கு அங்கு பயிற்சியாளராக இருந்த நசீம் அகமது ஈட்டி எறிதல் தொடர்பான வித்தைகளை கற்றுக்கொடுத்தார். 


நீரஜ் சோப்ராவின் சாதனைகள்:


2012 ஆம் ஆண்டு ஈட்டி எறிதல் அண்டர் 16 போட்டியில் இந்திய அளவில் சாம்பியன் பட்டத்தை வென்றார். 2014 இல், பாங்காக்கில் நடந்த யூத் ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் முதல் சர்வதேசப் பதக்கம் (வெள்ளி) வென்றார். 2015 இல், சென்னையில் நடந்த மாநிலங்களுக்கு இடையேயான போட்டியில் 77.33 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தேசிய சீனியர் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் பதக்கத்தைப் பெற்றார்.


திருப்புமுனையாக அமைந்த 2016:


சில மாதங்களுக்குப் பிறகு, கொல்கத்தாவில் நடந்த தேசிய ஓபன் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். நீரஜ் சோப்ரா கவுகாத்தியில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 82.23 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றதால் 2016 ஆம் ஆண்டு அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதனிடையே, உவே ஹோன், கேரி கால்வர்ட் மற்றும் வெர்னர் டேனியல்ஸ் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் தனது திறமைகளை தொடர்ந்து மேம்படுத்தினார். 


இந்திய ராணுவ அதிகாரி:


பல தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் நீரஜ் சோப்ரா தொடர் வெற்றிகளை பெற்றதால் இந்திய ராணுவம் இவரை கொளரவித்தது. 2017 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷன் அதிகாரியாக பொறுப்பேற்க நேரடி நியமன ஆணையை வழங்கி கெளரவித்தது.


மிஷன் ஒலிம்பிக்ஸ் விங்:


இந்திய ராணுவத்தில் சேர்ந்த பிறகு நீரஜ் சோப்ரா 'மிஷன் ஒலிம்பிக்ஸ் விங்' மற்றும் புனேவில் உள்ள ராணுவ விளையாட்டு நிறுவனத்தில் பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டார். பல்வேறு தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளுக்கு 11 துறைகளில் நம்பிக்கைக்குரிய விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து பயிற்சி அளிப்பதற்காக இந்திய ராணுவத்தின் முயற்சிதான் மிஷன் ஒலிம்பிக்ஸ் விங். 


காமன்வெல்த்தில் தங்கம்:


2018 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 86.47 மீட்டர் தூரம் ஈட்டி எறிதல் மூலம் தங்கப்பதக்கம் வென்றார். அதே ஆண்டில் தோஹாவில் நடந்த டயமண்ட் லீக்கில் 87.43 மீட்டர்கள் வரை ஈட்டி எறிந்து விருது வென்றார். ஆசிய விளையாட்டு போட்டியில் நீரஜ் சோப்ரா 88.06 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தைச் தட்டிச் சென்றார்.


 முழங்காலில் ஏற்பட்ட காயம்:


தனது திறமையை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த நீரஜ் சோப்ராவிற்கு 2019 ஆம் ஆண்டு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 8 மாதங்கள் அவர் எந்த விதமான போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை.


டோக்கியோ ஒலிம்பிக் 2021:


ஆகஸ்ட் 7, 2021 ஆம் ஆண்டு இந்திய ஊடகங்கள் எல்லாம் நீரஜ் சோப்ராவை கொண்டாட ஆரம்பித்தது. ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தனர். பனிபட்டில் கனவுகளுன் பல பயிற்சிகளை மேற்கொண்ட நீரஜ் சோப்ரா தடகளத்தில் தங்கப்பதக்கத்தை வென்றார். இதில்  88.17 மீட்டர் எறிந்து இந்த குறிப்பிடத்தக்க சாதனையை அடைந்தார்.


இப்போட்டியில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 87.82 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். உலகின் நம்பர் 1 ஈட்டி எறிதல் வீரரான குரோஷியாவின் ஜக்குப் வாட்லெஜ் 86.67 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்


நீரஜ் சோப்ரா வென்ற தங்கப் பதக்கங்களின் பட்டியல்


2016: போலந்தில் நடந்த U20 உலக சாம்பியன்ஷிப்- 86.48 மீ எறிதலில் தங்கம்


2018: பிரான்ஸில் நடந்த சொட்டெவில்லே தடகளப் போட்டி - 85.17மீ தங்கம்


2018: பின்லாந்தில் நடந்த சாவோ கேம்ஸ்- 85.6 மீ எறிதலுடன் தங்கம்


2018: ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு - 86.47 மீ எறிந்து தங்கம்


2018: ஜகார்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 88.06 மீ எறிந்து தங்கம்


2021: டோக்கியோவில் கோடைகால ஒலிம்பிக்ஸ் - 87.58 மீ எறிந்து தங்கம்


2023:  உலக தடகள சாம்பியன்ஷிப் 2023 88.17 மீ எறிதல்


விருதுகள்:


நீரஜ் சோப்ரா 2018 ஆம் ஆண்டு அர்ஜுனா விருதையும், 2020 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் விஷிஷ்ட் சேவா பதக்கத்தையும் வென்றுள்ளார். அபினவ் பிந்த்ராவிற்குப் பிறகு தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் நீரஜ் ஆவார்.


இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருது 2022 இல் அவருக்கு வழங்கப்பட்டது.