பாரீஸ் ஒலிம்பிக் 2024:


கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கிய பாரீஸ் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் நான்கு இடங்களில் சீனா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இருக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை 3 வெண்கலப்பதக்கம் வென்று புள்ளிப்பட்டியலில் 50வது இடத்தில் இருக்கிறது.


இந்த மூன்று வெண்கலப்பதக்கங்களும் துப்பாக்கிச்சுடுதல் மூலம் தான் இந்தியா கைப்பற்றியது. இந்தியா சார்பில் 117 வீரர்கள் பங்கேற்றாலும் தொடர்ந்து வீரர்கள் தோல்வியையே சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், தொழிலதிபரும், ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் தலைவருமான சஜன் ஜிண்டால் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


கார் பரிசாக வழங்கப்படும்:


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் "ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் ஒவ்வொரு இந்திய வீரர்களுக்கும் கார் பரிசாக வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நம்முடைய வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் வெற்றிக்காக சிறப்பானதை பெறுவதற்கு அவர்கள் தகுதியானவர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.






இவரின் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்துடன் இணைந்து மோரிஸ் காரேஜஸ் இண்டியா என்ற நிறுவனமானது எம்ஜிவிண்ட்சர் (MG Windsor) என்ற சொகுசு காரை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.





முன்னதாக அட்லிஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மொஹக் நஹ்தா, "நீரஜ் சோப்ரா  தங்கப் பதக்கத்தைப் வென்றால் அனைவருக்கும் இலவச விசா சேவைகளை கொடுப்பேன்" என்று கூறியிருந்தார்.