உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், ஒலிம்பிக் விளையாட்டுகளில் மறக்க முடியாத சம்பவங்களை கீழே காணலாம்.
- ஆண்கள் மட்டுமே பங்கேற்று வந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் முதன்முறையாக 1900ம் ஆண்டு பெண்களும் பங்கேற்றனர். அந்த ஒலிம்பிக்கில் மொத்தம் 22 பெண்கள் தடகளப் போட்டிகளில் பங்கேற்றனர்.
- 1948ம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் தடகள வீரர்கள் முதன்முறையாக வீல் சேர்களில் அமர்ந்து பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. அதாவது, இரண்டாவது உலகப் போரின்போது காயம் அடைந்த ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்க வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதுவே நாளடைவில் பாராலிம்பிக்கிற்கான வழிகாட்டுதலாக மாறியது.
- ஒலிம்பிக் போட்டிகள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற பிறகு, உலகம் தொழில்நுட்பத்தை நோக்கி வளர்ந்த பிறகு 1960ம் ஆண்டு முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அன்று முதல் இன்று வரை தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- 1968ம் ஆண்டு மெக்சிகோவில் நடந்த ஒலிம்பிக் போட்டித் தொடரில் குடியுரிமை விவகாரம் தொடர்பாக ஆப்பிரிக்க- அமெரிக்க வீரர்கள் ஜான் கார்லஸ் – டாம் ஸ்மித் பதக்கங்களைப் பெறும்போது தங்களது கைகளை உயர்த்தி கறுப்பின மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
- 1972ம் ஆண்டு முனிச் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இஸ்ரேலைச் சேர்ந்த 11 வீரர்களை பாலஸ்தீன தீவிரவாதிகள் சிறைபிடித்து கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- 1980ம் ஆண்டு நடந்த மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியை அமெரிக்கா புறக்கணித்த நிலையில், 1984ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியை சோவியத் யூனியன் புறக்கணித்தது.
- உலகின் முக்கியமான நாடாக கருதப்படும் வடகொரியாவின் எதிரி நாடாக கருதப்படுவது தென்கொரியா. 2000ம் ஆண்டு சிட்னியில் நடந்த ஒலிம்பிக் தொடக்க விழாவில் வடகொரியா மற்றும் தென்கொரியா வீரர்கள் இணைந்து பங்கேற்றனர். இது உலக நாடுகள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.
- 2004ம் ஆண்டு ஏதென்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் தொடரில் பதக்கங்கள் புது வடிவம் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டது.
- 2008ம் ஆண்டு சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ் நீச்சல் போட்டிகளில் 8 தங்கத்தை வென்றார். இன்றளவும் ஒலிம்பிக்கில் தனிநபர் வென்ற அதிக தங்கமாக இது உள்ளது.
- 2020ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் தொடர், கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2021ம் ஆண்டு நடந்தது. ஆனாலும், அந்த ஒலிம்பிக் போட்டி 2020 ஒலிம்பிக் என்றே அழைக்கப்பட்டது.
ஒலிம்பிக்கில் எத்தனையோ மறக்க முடியாத சம்பவங்கள் நடந்தாலும், மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் காலத்திற்கும் மறக்க முடியாத நிகழ்வுகளாக ஒலிம்பிக் வரலாற்றில் உள்ளது.