Paris 2024 Olympics: பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்பவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பரிசு, பார்வையாளர்களை ஆச்சரிப்படுத்தியுள்ளது.


பாரிஸ் ஒலிம்பிக் 2024:


பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கடந்த, 27ம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு விளையாட்டுகளின் வெவ்வேறு பிரிவுகளில், வெற்றி பெற்று வீரர்களை பதக்கங்களை குவித்து வருகின்றனர். அதேநேரம், வெற்றியாளர்கள் பதக்கங்களை பெறும்போது, கூடுதலாக சிறப்பு பரிசு ஒன்று வழங்கப்பட்டு வருகிறது. அந்த பெட்டகத்தில் இருப்பது என்ன என்பதை அறிய வேண்டும் என்ற ஆவல் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.






ஒலிம்பிக் வெற்றியாளர்களுக்கு சிறப்பு பரிசு:


ஒலிம்பிக் போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சியின் போது, வெற்றியாளர்கள் மேடையில் ஏற்றப்பட்டு, அவர்கள் பிடித்த இடங்களுக்கு ஏற்ப தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகிய பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. அதேநேரம், நீளமான பரிசு பெட்டி ஒன்றையும் வீரர்கள் பரிசாக பெறுகின்றனர். 40 சென்டி மீட்டர் நீளத்திலான பெட்டியில் இருப்பது என்ன என்பது பெரிய கேள்வியாக உருவாகியுள்ளது. அதற்கான பதில், அந்த பெட்டியில் இருப்பது பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டின் அதிகாரப்பூர்வ போஸ்டர் என்பதே ஆகும். அதோடு மட்டுமின்றி கூடுதல் பரிசு ஒன்றும் உள்ளது.


சுதந்திரத்தை உணர்த்தும் பொம்மை:


ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ம்ஸ்கோட் என்ற பொம்மை வழங்கப்படுகிறது. பாரிஸ் ஒலிம்பிக்கில் வழங்கப்படும் பொம்மைகள் ப்ரிஜெஸ் என அழைக்கப்படுகிறது. அந்நாட்டின் பாரம்பாரியமான ப்ரிஜியன் தொப்பியை பறைசாற்றும் விதமாக இந்த பெயர் வழங்கப்பட்டுள்ளது. ப்ரிஜியன் தொப்பி என்பது சுதந்திரத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. அந்த பொம்மையின் வயிறுப் பகுதியில், வெற்றியாளர்கள் எந்த பதக்கம் பெற்றனரோ, அந்த பதக்கத்திற்கான (தங்கம்/ வெள்ளி/வெண்கலம்) அடையாளம் பொறிக்கப்பட்டு இருக்கும். மேலும், பொம்மையின் பின்புறத்தில் "பிராவோ" என்ற வாசகமும் இடம்பெற்று இருக்கும்.