Olympic Lakshya sen: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய பேட்மிண்டன் வீரர் லக்க்ஷயா சென்னின் வெற்றி நீக்கப்பட்டதற்கு, ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


நீக்கப்பட்ட லக்க்ஷயா சென் வெற்றி:


33வது ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் நூற்றுக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். அவர்களில் பேட்மிண்டன் வீரர் சேர்ந்த லக்க்ஷயா சென், தனிநபர் பிரிவில் எல்-குழுவில் இடம்பெற்றுள்ளார். தனது முதல் லீக் சுற்று போட்டியில் கவுத்தமாலாவின் கெவின் கார்டனுக்கு எதிராக களமிறங்கினார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர், 21-8 மற்றும் 22-20 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அசத்தினார். ஆனால், அந்த வெற்றி தற்போது நீக்கப்பட்டுள்ளது தான் இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.






லக்க்ஷயா சென் வெற்றி நீக்கப்பட்டது ஏன்?


லக்க்ஷயா சென் உடனான போட்டியின் முடிவில், இடது முழங்கை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒட்டுமொத்த ஒலிம்பிக் போட்டியிலிருந்தே விலகுவதாக கெவின் கார்டன் அறிவித்தார். இதையடுத்து, “குரூப் ஸ்டேஜ் விளையாட்டிற்கான BWF பொதுப் போட்டி விதிமுறைகளின்படி, குரூப் L இல் கார்டன் சம்பந்தப்பட்ட அனைத்து போட்டிகளின் முடிவுகளும் இப்போது நீக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது” என சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக லக்க்ஷய சென் ஒரு வெற்றியை இழந்ததோடு, அவர் உள்ள குழு மட்டும் தற்போது 3 வீரர்களை கொண்ட குழுவாகவும் மாறியுள்ளது. நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற அடுத்து விளையாட உள்ள இரண்டு போட்டிகளிலும், வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் லக்‌ஷயா சென் தள்ளப்பட்டுள்ளார்.



  • லக்க்ஷய சென் Vs ஜுலியன் கர்ராகி, இன்று

  • லக்க்ஷய சென் Vs 2ஜொனதன் கிரிஷ்டி, 31-07-24


குவியும் கண்டனங்கள்:


ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுகளில், ஒவ்வொரு போட்டியும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அப்படி இருக்கையில், ஒரு வெற்றியையே நீக்குவது எப்படி ஏற்கமுடியும் என, சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனத்திற்கு இந்தியர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதிகாரப்பூர்வமான போட்டியில் வெற்றி பெற்ற பிறகும், அதனை நீக்குவது என்பது எப்படிப்பட்ட விதி? அது அங்கீகரிக்கப்பட்டது எப்படி எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். லக்க்ஷயா சென்னிற்கு அநீதி இழைக்கப்பட்டு இருப்பதாகவும் நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.