மாற்றுத்திறனாளிகளுக்கான பாரீஸ் பாராலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டிகளில் இந்தியா சார்பில் மொத்தம் 84 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அந்தவகையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப்பதக்கம் உட்பட மொத்தம் ஏழு பதக்கங்களை வென்றது. 


2ஆவது முறையாக வெள்ளி வென்று அசத்திய யோகேஷ்:


இந்த நிலையில், வட்டு எறிதல் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார் யோகேஷ் கதுனியா. இன்று நடைபெற்ற போட்டியில் 42.22 மீட்டர் தொலைவுக்கு வட்டை எறிந்து சாதனை படைத்துள்ளார் 27 வயதான யோகேஷ் கதுனியா.


கடந்த 2020ஆம் ஆண்டு, ஜப்பான தலைநகர் டோக்கியோவிலும் இவர் வெள்ளி பதக்கம் வென்று கலக்கினார். அந்த சமயத்தில், 44.58 மீட்டர் தொலைவுக்கு வட்டை எறிந்தார். இதையடுத்து, இன்றைய போட்டியிலும் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.


மாற்று திறனாளிகளை ஊக்கப்படுத்தும் விதமாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் தொடரை போலவே மாற்று திறனாளிகளுக்காக பாராலிம்பிக் நடத்தப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற்றவுடன் பாராலிம்பிக் தொடர் நடத்தப்படுவது வழக்கம். இதன்படி பாரிஸ் நகரில் ஒலிம்பிக் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், பாராலிம்பிக் தொடர் நடந்து வருகிறது.


இந்திய வீரர்கள் மீது கிளம்பியுள்ள எதிர்பார்ப்பு:


இந்த பாராலிம்பிக்கில் மொத்தம் 184 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் மொத்தம் 22 விளையாட்டு போட்டிகளில் பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படுகிறது. மொத்தம் 4 ஆயிரத்து 440க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 


கடந்த முறை இந்திய வீரர்களும், வீராங்கனைகளும்  பாராலிம்பிக்கில் அசத்தினார்கள். இதனால் இந்த முறையும் இந்தியா அசத்தும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். 


இதுவரை நடைபெற்ற பாராலிம்பிக்கில் அதிக இந்திய வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்பது இதுவே முதன்முறை ஆகும். கடந்த முறை 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் உள்பட 19 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தியது. இதனால் இந்த முறையும் இந்தியா கடந்த முறையை காட்டிலும் அதிக பதக்கங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.