உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் உள்ள விளையாட்டு வீரர்கள் பெரும் ஆவலுடன் காத்திருப்பதுடன் போர் வீரர்கள் தயாராவதைப் போல் தங்களை தயார்படுத்தி வருவது பாரீஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுகளுக்காகத்தான். இன்னும் 10 வாரங்களில் தொடங்கப்படவுள்ள ஒலிம்பிக்கில் பங்குபெறுவதற்காக இந்திய வீரர்-வீராங்கனைகளும் தங்களைத் தயார்படுத்தி வருகின்றனர்.


இந்நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்புத் தலைவர் சஞ்சய் சிங் இன்று அதாவது மே 21ஆம் தேதி மிகவும் முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில், ”பாரீஸில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரநிதித்துவப்படுத்தும் மல்யுத்த வீரர்களை தேர்வு செய்வதற்கு கடந்த முறை பின்பற்றப்பட்ட சோதனைச் சுற்றுகள் எதுவும் நடத்தப்படாமல், அதற்கும் முன்னர் இருந்த கோட்டா முறையே பின்பற்றப்படும் என தெரிவித்துள்ளார்.


மேலும், பேசிய அவர், ”இந்திய மல்யுத்த கூட்டமைப்பு பல காலங்களாக கோட்டாவில் வெற்றிபெறுபவர்களை ஒலிம்பிக்கிற்கு அனுப்பி வந்தது. ஆனால் அது 2021 இல் பிரிஜ் பூஷன் ஷரன் சிங்கின் கீழ் இந்த முறை மாற்றப்பட்டது. பிரிஜ் பூஷன் ஷரன் சிங் கொண்டுவந்த முறைக்கான பின்னணியில் உள்ள யோசனை என்னவென்றால், நாடு தனது சிறந்த மல்யுத்த வீரர்களை ஒலிம்பிக்கிற்கு அனுப்புவதை உறுதி செய்வதாக இருந்தது. ஆனால் தற்போது கூட்டமைப்பு தனது கொள்கையை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது” என குறிப்பிட்டார்.


அதேபோல், "ஒலிம்பிக் தொடங்குவதற்கு குறுகிய கால இடைவெளி மட்டுமே உள்ள நிலையில், சோதனைகள் எதுவும் நடத்தாமல், கோட்டா வீரர் வீராங்கனைகளை ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு ஒருமனதோடு தயாராவதற்கு வழிவகை செய்யுங்கள் என கோட்டா வீரர் வீராங்கனைகள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கோட்டா முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது" என்றார்.






மேலும், ”கோட்டா வீரர்களாக யார் தற்போது உள்ளார்களோ அவர்கள் ஒலிம்பிக்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்று கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதால், வீரர்கள் இப்போது நிம்மதியாக இருப்பார்கள் மற்றும் வீரர்கள் ஒலிம்பிக்கிற்கு தயாராவதில் முழுக்கவனம் செலுத்த முடியும். பயிற்சியாளர்களுடன் கலந்தாலோசித்து, வெளிநாடுகளில் சிறந்த பயிற்சி  உள்ளிட்ட வசதிகளை வீரர்களுக்கு வழங்குவோம்” எனத் தெரிவித்தார்.