Boxer Parveen Hooda: உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற பர்வீன் ஹூடாவை இடைநீக்கம் செய்து உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து, இந்தாண்டு ஜூலை மாதம் தொடங்கும் 2024ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் ஹூடா பங்கேற்கும் கனவு பறிபோகலாம். 


கடந்த ஒரு ஆண்டாக தான் இருக்கும் இருப்பிடத் தகவலை மூன்று முறை வழங்காததற்காக உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை பர்வீன் ஹூடாவை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 2024 ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை வீரர் ஒதுக்கீட்டில் இருந்து இந்தியா சார்பில் இவர் கலந்துகொள்ள முடியாது. 


என்ன நடந்தது..? - முழு விவரம் இதோ:


கடந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 57 கிலோ எடைப் பிரிவில் ஒலிம்பிக் ஒதுக்கீட்டை பெற்ற பர்வீன் ஹூடா, கடந்த ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரை உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை (World Anti-Doping Agency) விதிகளின்படி தனது இருப்பிடத்தைப் பற்றிய தகவலை வழங்கத் தவறிவிட்டார். இதன் காரணமாக, பர்வீன் ஹூடா அடுத்த ஆண்டு வரை எந்தவொரு போட்டியிலும் பங்கேற்க முடியாது. இதுகுறித்து பர்வீன் ஹூடாவின் பயிற்சியாளர் சுதிர் ஹூடா பிடிஐயிடம் தெரிவிக்கையில், "உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை பர்வீன் ஹூடாவை ஒன்றரை ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்துள்ளது. இந்த இடைநீக்கம் இந்த மாதம் தொடங்கி நவம்பர் 2025 வரை இருக்கும்” என்று தெரிவித்தார். 


விதி என்ன சொல்கிறது?


உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை-ன் பதிவுசெய்யப்பட்டு சோதனைக் குழுவில் (RTP) சேர்க்கப்பட்டுள்ள வீரர்கள், தாங்கள் தங்கியுள்ள முழுமையான முகவரிகள், பயிற்சி இடங்கள், வேலை அல்லது எங்கு செல்கிறோம் உள்ளிட்ட தகவல்கள், முகவரிகள் மற்றும் ஒவ்வொரு பயிற்சியின் நேரத்தையும் வழங்க வேண்டும். மேலும், வீரர்கள் ஒவ்வொரு 4 மாதங்களுக்கு ஒரு முறை 60 நிமிடங்கள் முகமைக்கு ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில், வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்படும். 


இதுகுறித்து உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை தெரிவிக்கையில், 12 மாதங்களுக்குள் மூன்று முறை இருப்பிடத்தை தெரிவிக்காதது ஊக்கமருந்து எதிர்ப்பு விதி மீறலாகக் கருதப்படுகிறது. இது வழக்கமாக 2 வருட தடையை ஏற்படுத்துகிறது. இருப்பினும் இது உங்கள் பிழையைப் பொறுத்து 1 வருடமாக குறைக்கப்படலாம் என்று தெரிவிக்கிறது. 


இந்த தடை குறித்து பர்வீன் ஹூடாவின் வழக்கறிஞர் விதுஷ்பத் சிங்கானியா, சர்வதேச சோதனை முகமையுடன் (ITA) தொடர்பில் இருப்பதாகவும், தண்டனையை நீக்க அல்லது குறைக்க முயற்சிப்பதாகவும் கூறுகிறார். அப்போது பேசிய அவர், “நாங்கள் சர்வதேச சோதனை முகமை மற்றும் உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை உட்பட பல தரப்பினருடன் தொடர்பில் இருக்கிறோம். தண்டனை அல்லது குறைவான தண்டனைக்காக நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். 


இருப்பிடத் தகவலை வழங்காதது தவறுதான். அதை விரைவில் சமர்பிக்க இருக்கிறோம். இதை உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை ஏற்றுகொண்டால் பர்வீன் ஹூடாவிற்கு எந்த தண்டனையும் இருக்காது. ஒலிம்பிக் ஒதுக்கீட்டில் பர்வீன் இடம் பெற்றிருப்பதால் விரைவில் இந்த பிரச்சனையை சரி செய்ய முயற்சிக்கிறோம்." என்று தெரிவித்தார்.