ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, இறுதிப்போட்டியின் போது நடந்து ஒரு சுவாரஸ்யமான நிகழ்வை பகிர்ந்துள்ளார். அதில், ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தனது ஈட்டியை எடுத்துச் சென்றுவிட்டதாகவும், நீண்ட நேரமாக அவர் தனது ஈட்டியை தேடி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தனியார் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் இந்த நிகழ்வைப் நினைவுக் கூர்ந்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் வீசி தங்கப்பதக்கத்தை வென்றார். தன்னுடைய முதல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள 23 வயதான இவர் இந்தியாவிற்கு தடகளத்தில் முதல் தங்கத்தை வென்று அசத்தினார். இதே போட்டியில், பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் நதீம் ஐந்தாவது இடம் பிடித்தார்.
நீரஜ் சோப்ராவும், அர்ஷத் நதீமும் நல்ல நண்பர்கள். ஒலிம்பிக் போட்டியின்போது தனது ஈட்டியை எடுத்து வைத்துக்கொண்டு அவர் விளையாடியதாக நீரஜ் தெரிவித்துள்ளது இப்போது வைரலாகி வருகின்றது. அதுமட்டுமின்றி, ஒலிம்பிக் தொடரில் பாகிஸ்தானுக்கு ஒரு அடையாளத்தை அர்ஷத் கொடுத்திருக்கிறார். எல்லைகள் தாண்டி அவருக்கு ஆதரவு தர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய அர்ஷத், பதக்கம் வென்றிருந்தால் அதுவே ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் பாகிஸ்தான் பெற்றிருக்கும் முதல் பதக்காமாக இருந்திருக்கும். எனினும், இறுதிப்போட்டி வரை முன்னேறி நம்பிக்கையை கொடுத்துள்ளார்.
முன்னதாக, ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா தன்னுடைய முதல் வாய்ப்பில் அவர் 87.03 மீட்டர் தூரம் வீசினார். அதன்பின்னர் இரண்டாவது வாய்ப்பில் 87.58 மீட்டர் தூரம் வீசி அசத்தினார். மூன்றாவது வாய்ப்பில் 76.79 மீட்டர் வீசினார். நான்காவது,ஐந்தாவது வாய்ப்பில் ஃபவுல் செய்தார். எனினும் தன்னுடைய இரண்டாவது வாய்ப்பில் அவர் வீசிய 87.58 மீட்டர் தூரம் மூலம் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்தார்.
இதன் மூலம் தடகள போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. கடைசியாக 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் அபினவ் பிந்த்ரா இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று இருந்தார். அதன்பின்னர் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் வென்ற இரண்டாவது நபராக நீரஜ் சோப்ரா சாதனைப் படைத்துள்ளார். மேலும் தடகளத்தில் இந்தியாவின் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். இது தவிர ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு ஹாக்கியில் 8 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இவர் இழந்ததால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் எப்படியாவது தகுதிப் பெற வேண்டும் என்று தீவிரமாக உழைத்தார். 2020ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஒரு சர்வதேச தடகள போட்டியில் 87.86 மீட்டர் தூரம் வீசி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றார். அதன்பின்னர் ஒலிம்பிக் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட போது இவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாமல் சற்று வருத்தத்தில் இருந்தார். எனினும் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் தடகளத்தில் 88.07 மீட்டர் தூரம் வீசி தன்னுடைய தேசிய சாதனையை உடைத்து புதிய தேசிய சாதனைப் படைத்தார்.
இதனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் பதக்கம் வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்ப்பார்ப்பை அவர் பூர்த்தி செய்துள்ளார். 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்றார். அவருக்கு பிறகு தனி நபராக இந்தியாவிற்கு இரண்டாவது தங்கத்தை வென்று புதிய வரலாற்றை நீரஜ் சோப்ரா எழுதியுள்ளார்.