ஒட்டு மொத்த விளையாட்டு உலகமும் காத்திருப்பது அடுத்த மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பைக்காகத்தான். கிரிக்கெட் வரலாற்றிலேயே உலகக் கோப்பைக்காக இம்முறை மொத்தம் 20 அணிகள் களமிறங்குகின்றது. இதற்கு முன்னர் நடைபெற்ற ஐசிசி கிரிக்கெட் தொடர்களில் இவ்வளவு அணிகள் கலந்துகொண்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை 20 அணிகள் கலந்துகொள்வதாலே டி20 கிரிக்கெட் மீதான எதிர்பார்ப்பு பெரும்பாலான நாடுகளில் ஏற்பட்டுள்ளது. 



இதுமட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த உலக நாடுகளும் காத்திருக்கும் ஒரு விளையாட்டுத் திருவிழா என்றால் அது 2024ஆம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்காகத்தான். இம்முறை பாரீஸில் நடைபெறும் ஒலிம்பிக் வரும் ஜூலை மாதம் 26ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதிவரை மொத்தம், 16 நாட்கள் நடைபெறவுள்ளது. ஆனால் அதே நேரத்தில் கால்பந்து, கைப்பந்து மற்றும் ரஹ்பி போன்ற விளையாட்டுகள் ஜூலை 24ஆம் தேதி முதலே நடைபெறும் என்பதால் ஒலிம்பிக் மொத்தம் 19 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 




ஒலிம்பிக் தொடங்க இன்னும் சரியாக 10 வாரங்கள்  மற்றும் 4 நாட்கள் மட்டுமே இருப்பதால் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட மொத்தம் 10 ஆயிரத்து 500 வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்த 10 ஆயிரத்து 500 வீரர் மற்றும் வீராங்கனைகள் அனைவரும் தேசிய ஒலிம்பிக் கமிட்டி மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆகியவற்றிலிருந்து கலந்துகொள்ளவுள்ளனர். மொத்தம் 46 வகையான போட்டிகள் நடைபெறவுள்ளது. 


ஒலிம்பிக் போட்டிகள் இதுவரை


1900ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா மொத்தம் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றது. அதேபோல் இந்தியா தனது முதல் ஒலிம்பிக் தங்கத்தினை 1928-ஆம் ஆண்டு ஹாக்கியில் வென்றது. 1928ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டம்மில் ஒலிம்பிக் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தியா 1896-இல் இருந்து கடந்த 2020ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 32 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று மொத்தம் 35 பதக்கங்களை வென்றுள்ளது.


இதில் கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் மொத்தம் 7 பதக்கங்களை வென்றது. இதில் நான்கு வெண்கலப் பதக்கங்களும், இரண்டு சில்வர் பதக்கங்களும் ஒரு தங்கமும் அடக்கம். இந்தியா இதுவரை மொத்தம் 10 தங்கப்பதக்கங்களையே வென்றுள்ளது. இந்த 10 தங்கப்பதக்கங்களில் 8 தங்கப்பதக்கங்களை இந்திய ஹாக்கி அணியின் ஆண்கள் பிரிவினர் வென்று கொடுத்துள்ளனர். 




இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர் வீராங்கனைகள் தங்களது அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வெல்ல மிகவும் தீவிரமாக பயற்சி எடுத்து வருகின்றனர்.