டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். ஒலிம்பிக் தடகள வரலாற்றில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். இதனால் இவருக்கு பலரும் பரிசு அறிவித்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இவர் தொடர்பாக ஒரு செய்தி ஒன்று பரப்பப்பட்டு வந்தது.
அதாவது டோக்கியோ ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ராவின் ஈட்டியை பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் எடுத்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. அதற்கு நீரஜ் சோப்ராவும் ஒரு கருத்து தெரிவித்ததாக கூறப்பட்டிருந்தது. அதில் அவர் தன்னுடைய முதல் முயற்சியை ஏன் வேகமாக செய்தேன் என்பது தொடர்பாக அளித்த விளக்கத்தை எடுத்து இந்த செய்திக்கு ஏதுவாக மாற்றியிருந்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது நீரஜ் சோப்ரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், “என்னுடைய கருத்துகளை யாரும் தங்களுடைய தேவைக்கு ஏற்ப பயன்படுத்த கூடாது. விளையாட்டு எப்போதும் நமக்கு ஒற்றுமையை கற்றுத்தரும். என்னுடைய கருத்துகளுக்கு கடந்த சில நாட்களாக வரும் எதிர்கருத்துகளை என்னை மிகவும் வேதனை அடைய செய்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
ஒரு சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் ஒருவர் தன்னுடைய ஈட்டியை பயன்படுத்த வேண்டும் என்றால் அதை போட்டி அமைப்பாளர்களிடம் கொடுக்க வேண்டும். அவர்களிடம் போட்டி தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக கொடுக்க வேண்டும். போட்டி முடியும் வரை அந்த ஈட்டி அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். அதை அந்த வீரர் மற்ற வீரர்கள் யார் வேண்டும் என்றாலும் பயன்படுத்தலாம். போட்டி முடிந்த பிறகு அந்த ஈட்டியை அவர் தன்னுடன் எடுத்து வரலாம். ஆகவே போட்டி முடியும் வரை அது பொதுவான ஈட்டியாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: டேபிள் டென்னிஸ் இரண்டாவது குரூப் போட்டியிலும் சோனல் பட்டேல் தோல்வி..!