ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு வரலாற்றுப் பெருமை சேர்த்துள்ளார் இளம் வீரர் நீரஜ் சோப்ரா. நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், ஒலிம்பிக் ஸ்டாரான நீரஜ்ஜையும், சூப்பர் ஸ்டாரான ரஜினியையும் ஒப்பிட்டு பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா பதிவு செய்துள்ள ட்வீட் ஒன்று கவனம் பெற்றுள்ளது.
ரன்தீப்பின் ட்வீட்..
ரன்தீப் ஹூடா தனது ட்விட்டர் பக்கத்தில், "வெற்றி நாயகன் நீரஜ்ஜின் பெயரை நீங்கள் திரும்பத் திரும்ப உச்சரித்துப் பாருங்களேன் ரஜினி, ரஜினி, ரஜினி என்று ஒலிக்கும். இப்போது உங்களுக்கு அந்த ரகசியம் புரிந்துவிட்டதா? ரஜினிகாந்த் எல்லா இடத்திலும் இருக்கிறார்" எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு வைரலாகி வருகிறது. நீரஜ், ரஜினி இருவரும் தத்தம் துறையில் நட்சத்திரங்கள் என்பதை ஒப்பீட்டளவில் இப்படிக் கூறியிருக்கிறார் ரன்தீப் ஹூடா. காலா படத்தில் கம்பீரமாகத் தோன்றும் ரஜினிகாந்தின் போஸ்டரை இந்த ட்வீட்டுக்கு அவர் பயன்படுத்தியுள்ளார். முன்னதாக, நீரஜ் சோப்ராவிடம் உங்களின் பயோபிக் பாலிவுட்டில் படமாக வேண்டும் என விரும்புகிறீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "இப்போதைக்கு எனது முழுக் கவனமும் ஈட்டி எறிதலில்தான். நான் இன்னும் நிறைய பதக்கங்களை நாட்டுக்காக வெல்ல வேண்டும். மற்றபடி பயோபிக் காத்திருக்கட்டும்" என்று கூறினார்.
நீரஜ் பற்றி சிலத் தகவல்களை அறிவோம்..
ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்ற 32வது ஒலிம்பிக் திருவிழாவில், ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று தந்தவர் தான் நீரஜ் சோப்ரா. இதன் மூலம் தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று தந்து வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார். அவரது வெற்றி இந்திய விளையாட்டு வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுவிட்டன.
பானிபட் டூ டோக்கியோ:
நீரஜ் சோப்ரா ஹரியாணா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்தவர். சண்டிகரில் உள்ள பிரபலமான டிஏவி கல்லூரியில் பட்டம் பயின்றார். பின்னர் இந்திய ராணுவத்தில் இணைந்தார். ராணுவத்தில் ராஜ்புட்டானா ரைபில்ஸ் பிரிவில் சுபேதராகப் பணிபுரிகிறார். இவரது தந்தை ஒரு விவசாயி.
கல்லூரி நாட்களிலேயே இவருக்கு ஈட்டி எறிதல் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஆனால், 2011 ஆம் ஆண்டு தான் முறையாக ஈட்டி எறிதல் பயிற்சியில் தன்னை ஈடுபடுத்தினார். அதன் பின்னர், 2016 ஆன் ஆண்டு போலந்து நாட்டில் நடைபெற்ற உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார். 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியிலும், இந்தோனேசியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கம் வென்றார். இதனால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்தியக் குழுவில் இடம்பெற்றிருந்த நீரஜ் சோப்ரா மீது ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை அவர் வீணடிக்கவில்லை, ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்றிருக்கிறார்.
87.58 மீட்டர் தூரம்..
ஒலிம்பிக் மைதானத்தில் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மொத்த 5 வாய்ப்புகள் ஒவ்வொரு வீரருக்கும். அதில், முதல் வாய்ப்பில் 87.03 மீட்டர் தூரத்துக்கும், இரண்டாவது வாய்ப்பில் 87.58 மீட்டர் தூரமும், மூன்றாவது வாய்ப்பில் 76.79 மீட்டர் தூரமும் ஈட்டியை பாயவிட்டார். நான்காவது மற்றும் ஐந்தாவது முயற்சிகள் ஃபவுல் ப்ளே ஆனாலும் கூட அவர் தனது இரண்டாவது முயற்சியில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தது தங்கப்பதக்கத்தை அள்ளித் தந்துள்ளது.