ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்தியா முதன்முறையாக 7 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த ஒலிம்பிக் தொடரில் போட்டி நிறைவுபெறும் நாளுக்கு முந்தைய நாளில் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரம் எறிந்து இந்தியாவிற்காக தங்கப்பதக்கத்தை வென்று புதிய உலக சாதனை படைத்தார்.
இந்தியாவின் ஒலிம்பிக் வரலாற்றிலே தடகளப் போட்டியில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும். முன்னதாக, 2008-ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றபிறகு, 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா சார்பில் தனிநபர் தங்கப்பதக்கம் வெல்வது இதுவே ஆகும்.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா இதற்காக வெளிநாடுகளில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தார். ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வதற்கு முன்பு அவர் 2013-ஆம் ஆண்டு இளையோருக்கான தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றிருந்தார். ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றிருந்தார். 2017-ஆம் ஆண்டு தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றிருந்தார். பின்னர், 2018-ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் தங்கப்பதக்கம் வென்றார்.
ஆசிய கோப்பையில் அவர் தங்கம் வென்றபோது தனியார் செய்தி நிறுவனம் ஒன்று அவரிடம் எடுத்த பேட்டியில், உங்களது வாழ்க்கை வரலாற்றை படமாக்க எடுக்க விரும்பினால் அந்த படத்தில் உங்கள் கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த நீரஜ் சோப்ரா, எனது வாழ்க்கை வரலாறை படமாக எடுத்தால் அதில் எனது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனது முதல் தேர்வு ரந்தீப் ஹூடாதான். ஒரு வேளை ஹூடா நடிக்கவில்லை என்றால் அக்ஷய்குமார் எனது கதாபத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக பயோகிராபி பிலிம் எனப்படும் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் பலவும் எடுக்கப்பட்டு, வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக, விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் வெற்றிப்படங்களாகவும் அமைந்துள்ளது.
எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு தோனி அன்டோல்ட் ஸ்டோரி என்றும், மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாறு பாக் மில்கா சிங் என்றும், மேரிகோம்மின் வாழ்க்கை வரலாறு படம், மல்யுத்த வீரர்களான போகத் குடும்பத்தினரின் வாழ்க்கை வரலாறான தங்கல், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலிராஜின் வாழ்க்கை வரலாறான சபாஷ் மிது, கபில்தேவின் வாழ்க்கை வரலாறான 83 என விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகள் திரைப்படங்களாக வெளிவந்து வசூலில் வாரிகுவித்துள்ளது. சில திரைப்படங்கள் தயாரிப்பில் உள்ளது.
ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, உடலை குறைப்பதற்காக மைதானம் சென்று, பின்னர் தடகள வீரராக மாறி, ஈட்டி எறிதலில் இந்தியாவிற்காக தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் நிஜ வாழ்க்கை உண்மையிலே ஒரு சினிமாவைப் போன்றே இருந்து வந்தது. இதனால், அவரது வாழ்க்கை வரலாறு விரைவில் பாலிவுட்டில் படமாக எடுக்கப்பட்டால் இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பதில் சந்தேகமில்லை.