ஒலிம்பிக் போட்டியையொட்டி, இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் விளையாடிய காட்சி ஆச்சர்யமூட்டும் வகையில் உள்ளது.
கோடைகால ஒலிம்பிக் போட்டியானது, நேற்றைய முன்தினம் ஜூலை 26 ஆம் தேதி, பிரான்ஸ் நாட்டில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி , நடைபெற்று வருகிறது. இதையடுத்து, ஒலிம்பிக் போட்டி குறித்து உலக அளவிலும் பேச்சுகளை கேட்க முடிகிறது. ஏனென்றால், இதர விளையாட்டு போட்டிகளைவிட , ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வது, மிகவும் கவுரமாக பார்க்கப்படுகிறது.
விண்வெளியில் குட்டி ஒலிம்பிக்:
இந்நிலையில், பூமியை தாண்டியும் ஒலிம்பிக் போட்டி கவனம் பெற்றிருக்கிறது. பூமியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் விண்வெளி வீரர்கள், ஒலிம்பிக் போட்டியை சிறப்பிக்கும் வகையில், நாசா வீடியோ வெளியிட்டுள்ளது.
அதில், குட்டி ஒலிம்பிக் என குறிப்பிட்டு, அவர்கள் விளையாட்டுகளை விளையாடுவதை பார்க்க முடிகிறது . மேலும் அங்கு புவியீர்ப்பு விசை இல்லாத போது, அங்கு எடையுள்ள ஒரு பொருளை நகர்த்துவது மிகவும் சுலபம் என்பதால், அவர்கள் எளிதாக பளுதூக்குதல், மற்றவர்களை தூக்குவது, குண்டு எறிதல் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவதை பார்க்க முடிந்தது.
மேலும், விண்வெளியில் தண்ணீர் மிதக்கும் காட்சியையும், அதை பறந்து கொண்டே குடிக்கும் காட்சியையும் பார்க்கும் போது வியப்பாக இருந்தது.
இந்த வீடியோவை , நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது.
சோகத்திலும் மகிழ்ச்சி:
போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் உள்ள சிக்கல்கள் காரணமாக, நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) நீண்ட காலம் தங்கியிருக்கின்றனர். இதனால், அவர்கள் மீண்டும் பூமி திரும்புவதில் காலதாமதம் ஆகியுள்ளது. முதலில் ஜூன் நடுப்பகுதியில் முடிவடையும் ஒரு வார கால பணிக்கு திட்டமிடப்பட்டது, விண்வெளி வீரர்கள் இப்போது ஒரு மாதத்திற்கும் மேலாக விண்வெளி சுற்றுப்பாதையில் உள்ளனர். வில்மோர் மற்றும் வில்லியம்ஸை மீண்டும் ஸ்டார்லைனரில் பூமிக்கு கொண்டு வருவதே முதன்மை இலக்கு என்று நாசா கூறியுள்ளது, ஆனால் ஸ்பேஸ் எக்ஸி-ன் டிராகன் விண்கலம் 2வது வாய்ப்பாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாசா தெரிவிக்கையில், விண்வெளியில் இருந்து திரும்பும் தேதியை அறிவிக்கத் தயாராக இல்லை என்று கூறினார். "நாங்கள் தயாரானதும் வீட்டிற்கு வருவோம்" என்று நாசா கூறியதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தருணத்தில், சோகத்திலும் விண்வெளி வீரர்கள் மகிழ்ச்சிகரமாக விளையாடுவதை பார்க்கும் போது , அவர்களின் தைரியத்தையும், மனவலிமையும் உணரமுடிகிறது.