இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பிரபலமான விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்று. உலக அளவில் கிரிக்கெட் பல கோப்பைகள் கொண்ட போட்டிகள், தொடர்கள் என்று நடத்தப்பட்டாலும், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இல்லாதது ஒரு குறையாகவே பார்க்கப்பட்டது. தற்போது அதுவும் நிறைவேற போகிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா..?
வருகின்ற 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டும் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் மட்டுமின்றி, ஃப்ளாக் கால்பந்து, பேஸ்பாலும் சேர்க்கப்பட இருக்கிறது.
ஒலிம்பிக்கில் இனி கிரிக்கெட்:
ESPNcricinfo அறிக்கையின்படி, 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படும். கிரிக்கெட் கடைசியாக 1900 இல் பாரிஸ் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது. தற்போது 128 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் மீண்டும் களமிறங்குகிறது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்கும் முடிவு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படுவது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், இந்த வார இறுதியில் அக்டோபர் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அமர்வில் அது அறிவிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.
கடந்த பிப்ரவரியில் ஐஓசி இறுதி செய்த 28 விளையாட்டுகளின் பட்டியலில் கிரிக்கெட் சேர்க்கப்படவில்லை என்றாலும், கடந்த ஜூலை மாதம் ஐஓசி (International Olympic Committee)-யின் மதிப்பாய்வுக்காக ஒன்பது விளையாட்டுகளின் இறுதிப்பட்டியலில் சேர்க்கப்பட்டது. கிரிக்கெட் தவிர, பேஸ்பால், கொடி கால்பந்து, லாக்ரோஸ், ப்ரேக் டான்ஸ், கராத்தே, கிக் பாக்ஸிங், ஸ்குவாஷ் மற்றும் மோட்டார்ஸ்போர்ட் ஆகியவையும் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
128 ஆண்டுகளுக்கு பிறகு..
இதற்கு முன்பு ஒலிம்பிக்கில் ஒருமுறை மட்டுமே கிரிக்கெட் விளையாடப்பட்டுள்ளது. 1900 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் ஒரு விளையாட்டாக இருந்தது. இந்த ஆண்டு தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையே பாரிஸில் நடைபெற்றது. அப்போது பிரான்ஸ் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணியே வெற்றிபெற்றது. ஒலிம்பிக்கில் ஆடவர் மற்றும் பெண்களுக்கான போட்டிகள் டி20 முறையில் நடைபெறும் என தெரிகிறது.
தரவரிசையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் இதில் பங்கேற்கலாம். ஒலிம்பிக்கில் டி20 வடிவமே சரியாக இருக்கும் என ஐசிசி சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு கிரிக்கெட் என்றால் என்னவென்று தெரியாத நாடுகளில் கூட இப்போது கிரிக்கெட் விளையாடப்படுகிறது. இதன் காரணமாக இந்த விளையாட்டை படிப்படியாக ஒலிபிக்கில் சேர்க்க வேண்டும் என்ற குரல் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
ஒளிபரப்பு உரிமை மூலம் 15 பில்லியன் லாபம்:
ஊடகம் வெளியிட்ட செய்திகளின் அடிப்படையில், 2024 ஒலிம்பிக்கிற்கான இந்தியாவுடனான ஒளிபரப்பு ஒப்பந்தத்தில் (International Olympic Committee)15.6 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ஒன்றரை பில்லியன் ரூபாய்) பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டால், இந்த தொகை 150 மில்லியன் பவுண்டுகளை எட்டும். இந்தத் தொகையை இந்திய ரூபாயில் பார்த்தால், அது தோராயமாக ரூ.15 பில்லியன் ஆகும். கடந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியில் பெண்கள் கிரிக்கெட் அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு, சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்றன. இந்த இரண்டிலும் இந்திய அணி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.