Neeraj Chopra: ஈட்டி எறிதல் சாம்பியனான நீரஜ் சோப்ரா 88.77 மீட்டர் எறிந்து உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது மட்டும் இல்லாமல், 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார்.


ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியின் நீரஜ் சோப்ரா 88.77 மீட்டருக்கு ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் அடுத்த ஆண்டு பாரீஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார். சோப்ரா இப்போது 90 மீட்டர் என்ற அளவை ஈட்டி எறிதலில் எட்ட முயற்சித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


முதல் சுற்றிலேயே நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா 88.77 மீட்டர் எறிந்துள்ளதால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 


நீரஜ் சோப்ரா 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தைப் பெற்று, துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார். மேலும் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெறுமையையும் நீரஜ் பெற்றார். 


உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்னதாக ஊடகங்களுக்கு 90 மீட்டர் இலக்கு பற்றி கேட்டபோது, “ நான் அதற்குதான் முயற்சி செய்து வருகிறேன். நான் இப்போது 90 மீட்டருக்கு அருகில் வீசி வருகிறேன். ஆனால் எனக்கான நாளில், எனக்கு சாதகமான வானிலையும் இருந்தால்நிச்சயம் 90 மீட்டர் என்ற அளவை எட்டுவேன்” என கூறினார். 


நீரஜ் சோப்ராவைத் தொடர்ந்து குரூப் ஏ பிரிவில் மனு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். மனு 81.31 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அதேபோல் குரூப் பி பிரிவில் கிஷோர் ஜெனா 80.55 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் மூன்று இந்திய வீரர்கள் முன்னேறியுள்ளதால் மூவரும் பதக்கம் வெல்ல வேண்டும் என நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.