டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி  ஆஸ்திரேலிய அணியை 1-0 என்ற கணக்கில் தோற்கடித்து இந்திய மகளிர் அணி முதல் முறையாக அரையிறுதி சென்றுள்ளது. அத்துடன் 5 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஆஸ்திரேலிய மகளிர் அணியை தோற்கடித்து ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி அசத்தியுள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக பதக்கம் வெல்லும் வாய்ப்பையும் இந்திய மகளிர் அணி பெற்றுள்ளது. 


இந்நிலையில் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் வீழ்ச்சியும் அது எப்படி எழுந்தது என்று பார்ப்போம். 


1974 முதல் மகளிர் ஹாக்கி சர்வதேச தொடர்:


ஆடவர் ஹாக்கி அணி இந்திய சுதந்திரத்திற்கு முன்பாகவே இருந்து வருகிறது. அத்துடன் இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஒலிம்பிக் வரலாற்றில் தன்னுடைய முத்திரை மிகவும் ஆழமாக பத்திருந்தது.  தொடர்ச்சியாக 5 முறை தங்கம் வென்றும் அசத்தியிருந்தது. 1971ஆம் ஆண்டு ஆடவர் ஹாக்கி அணிகளுக்கு உலகக் கோப்பை போட்டிகள் முதல் முறையாக நடத்தப்பட்டது. அதன்பின்னர் ஐரோப்பிய நாடுகளில் ஹாக்கி விளையாட்டு வேகமாக பரவியது. 


இதன்விளைவாக மகளிர் ஹாக்கியும் மெதுவாக வர தொடங்கியது. முதல் முறையாக மகளிர் ஹாக்கி அணிகளுக்கு 1974ஆம் ஆண்டு ஹாக்கி உலகக் கோப்பை நடத்தப்பட்டது. அதில் இந்திய மகளிர் ஹாக்கி அணியும் பங்கேற்றது. அந்தத் தொடரில் இந்திய மகளிர் அணி 4ஆவது இடம் பிடித்து அசத்தியது. அது தான் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முதல் சர்வதேச போட்டி தொடர் ஆகும். அதன்பின்னர் நடைபெற்ற 1978ஆம் ஆண்டு உலக கோப்பையில் மகளிர் அணி 7ஆவது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தது. 


1980 மாஸ்கோ ஒலிம்பிக்:


1980ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஹாக்கி முதல் முறையாக சேர்க்கப்பட்டது. அதில் இந்திய மகளிர் ஹாக்கி அணி பங்கேற்றது. அதில் இரண்டு போட்டிகளில் மட்டும் வெற்று பெற்ற இந்திய மகளிர் அணி நான்காவது இடத்தை பிடித்தது. 


முதல் தங்கம்:


1982ஆம் ஆண்டு ஆசிய போட்டிகளில் மகளிர் ஹாக்கி முதல் முறையாக சேர்க்கப்பட்டது. அதில் இந்திய மகளிர் அணி தென்கொரியா அணியை வீழ்த்தி முதல் முறையாக தங்கப் பதக்கத்தை வென்றது. அது தான் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முதல் தங்கப் பதக்கம். 




2002 காமென்வெல்த் தங்கம் :


1982ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய மகளிர் ஹாக்கி சர்வதேச போட்டிகளில் சரியாக பதக்கங்களை வெல்ல அதன்பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு 2002ஆம் ஆண்டு நடைபெற்ற காமென்வெல்த் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதில் சுரஜ் லதா தேவி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து அணியை 3-2 என வீழ்த்தி தங்கம் வென்றது. அதன்பின்னர் சுரஜ் லதா தேவி தலைமையிலான இந்திய அணி 2003ஆம் ஆண்டு ஆப்ரோ ஆசிய கோப்பை மற்றும் 2004 ஆசிய கோப்பை ஹாக்கி என இரண்டிலும் தங்கம் வென்றது. அதன்பின்னர் இந்திய மகளிர் ஹாக்கி அணி மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு சென்றது. ஹாக்கி தரவரிசையில் 10ஆவது இடத்திற்கும் கீழாக சென்றது. 


முடிசுடா ராணி ராம்பால் வருகை:


2010ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அந்தத் தொடரில் 7 கோல்களை அடித்து சிறந்த இளம் வீராங்கனைப் பட்டத்தை வென்றார். அப்போது முதல் இந்திய மகளீர் ஹாக்கி அணியில் ராணி ராம்பால் தவிர்க்க முடியாத ஒரு வீராங்கனையான வலம் வருகிறார். அவரின் வருகைக்கு பிறகு இந்திய மகளிர் அணியில் புதிய உத்வேகம் இருந்தது. 




2016 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி:


2015ஆம் ஆண்டு ஹாக்கி உலக லீக் தொடரில் இந்திய அணி பங்கேற்றது. அந்தத் தொடரில் முதல் ஐந்து இடத்தில் வந்தால் இந்திய அணிக்கு ஒலிம்பிக் தகுதி பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்று கணிக்கப்பட்டது. அதன்படி ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்திற்கான போட்டியில் இந்தியா-ஜப்பான் அணிகள் மோதின. அதில் சிறப்பாக விளையாடிய ராணி ராம்பால் ஆட்டத்தின் ஒரே கோலை அடித்து இந்திய அணிக்கு ஒலிம்பிக் வாய்ப்பை பிரகாச படுத்தினார். அதன்பின்னர் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரில் இறுதி போட்டிக்கு முன்னேறிய இரண்டு அணிகளும் ஏற்கெனவே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று விட்டதால், உலக லீக் தொடரில் ஐந்தாவது இடத்தை பிடித்த இந்திய அணிக்கு ஒலிம்பிக் தகுதி அளிக்கப்பட்டது.


இதனால் 36ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மகளீர் ஹாக்கி அணி மீண்டும் ஒலிம்பிக்கில் களமிறங்கியது. அந்த ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி மிகவும் மோசமாக செயல்பட்டு கடைசி இடத்தை பிடித்தது. இதனால் மீண்டும் இந்திய மகளிர் அணி ஹாக்கி தரவரிசையில் 12ஆவது இடத்திற்கு சென்றது. 




2018ல் வெற்றிகள்:


ஒலிம்பிக் சரிவிற்கு பிறகு மீண்டும் இந்திய மகளிர் அணி கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வர தொடங்கியது. இதனால் தரவரிசையிலும் நல்ல முன்னேற்றம் கண்டது. 2018ஆம் ஆண்டு ஆசிய போட்டியில் வெள்ளிப் பதக்கம், 2018 காமென்வெல்த் போட்டியில் 4ஆவது இடம், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெள்ளி என இந்திய மகளிர் அணி அசத்தியது.




அத்துடன் 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற எஃப்.ஐ.ஹேச் சீரிஸ் இறுதி போட்டியில் இந்திய அணி ஜாப்பான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்தத் தொடரில் சிறந்த வீராங்கனைக்கான விருதையும் ராணி ராம்பால் தன்வசமாக்கினார். இதனால் மகளிர் தரவரிசையில் மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் வந்தது. 


2020 ஒலிம்பிக் தகுதி:


2020ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய  மகளிர் அணி தகுதிச் சுற்றில் பங்கேற்றது. இந்த முறை இந்திய அணி அமெரிக்கா அணியை எதிர்த்து இரண்டு போட்டிகளில் விளையாடியது. அதில் எந்த அணி அதிக வெற்றிகளை பெறுகிறதோ அது ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெறும். ஆனால் இந்திய அணி ஒரு வெற்றியும் அமெரிக்க அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றது. இதனால் அதிக கோல் அடித்த அணி என்ற முறையில் இந்திய அணி ஒலிம்பிக் போட்டிக்கு சென்றது. 


 






இந்திய அணி மீண்டும் ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல ராணி ராம்பால் அடித்த அந்த ஒரு கோல் தான் மிகவும் முக்கியமான காரணமாக அமைந்தது. 5-5 என சமமாக கோல் அடித்திருந்த போது ராணி ராம்பால் அடித்த அந்த ஒரு கோல் மூலம் இந்திய அணி 6-5 என்ற கணக்கில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது. 


2020 டோக்கியோ ஒலிம்பிக்:


2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் குரூப் சுற்றில் இரண்டு வெற்றி மற்றும் மூன்று தோல்விகளுடன் இந்திய மகளிர் அணி காலிறுதிச் சென்றது. உலக தரவரிசையில் 2ஆம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணியை முதல் முறையாக தோற்கடித்து அரையிறுதி சென்று இந்திய அணி அசத்தியுள்ளது. இந்தச் சூழலில் ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய மகளிர் அணி தன்னுடைய முதல் பதக்கத்தை வெல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


மேலும் படிக்க:'எனக்கு அந்த வலி புரியும்...' ஆறுதல் கூறிய பி.வி.சிந்து; அழுத தைவான் வீராங்கணை தாய் சுயிங்!