பாரீஸ் ஒலிம்பிக் 2024:


பாரீஸ் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாளான நேற்று(ஜூலை 27)10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் சரப்ஜோத் சிங், சீமா அர்ஜூன் சிங்க் ஆகியோர் தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்தனர். அதே நேரம் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் மனு பாக்கர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.


இந்தியா - நியூசிலாந்து மோதல்:


இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹாக்கி போட்டி தொடங்கியது. அதன்படி இந்திய ஹாக்கி அணி நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில் முதல் பாதியிலேயே நியூசிலாந்து அணி அபாரமாக ஒரு கோலை அடித்தது. அடுத்த 20 நிமிடம் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.


இந்திய அணியின் சார்பில் முதல் கோலை மன்தீப் சிங் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அந்தவகையில் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் இரண்டாவது கோலை இந்திய அணி வீரர் விவேக் சாஹர் பதிவு செய்தார். இதன் மூலம் இந்திய அணி 2- 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.






இதன் பின்னர் தான் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது. அதாவது கடைசி 20 நிமிடத்தில் 8 நிமிடங்கள் மட்டுமே மீதம் இருந்த சூழலில் நியூசிலாந்து அணி ஒரு கோலை அடுத்தது. இது இந்திய அணி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 2-2 என்ற சமநிலை ஏற்பட இந்திய அணி வெற்றி பெற ஒரு கோல் தேவைப்பட்டது.


கடைசி நிமிடத்தில் சம்பவம் செய்த ஹர்மன்ப்ரீத் சிங்:


கடைசி நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி ஸ்ட்ரோக் கிடைத்தது. அதனை மிக நேர்த்தியாக இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் கோலாக்கினார். இதனால் இந்திய அணி கடைசி நிமிடத்தில் 3-2 என்ற கணக்கில் த்ரில் வெற்றியை பதிவு செய்தது. அந்த வகையில் இந்திய அணி பாரீஸ் ஒலிம்பிக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது.


இதனைக்கண்ட ரசிகர்கள் மைதானத்தில் துள்ளிக்குதித்தனர். இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய அணி ஜூலை 29 ஆம் தேதி அர்ஜென்டினா அணியை எதிர்த்து 2 குரூப் போட்டியில் களம் காண இருக்கிறது. முன்னதாக கடந்த முறை நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அர்ஜென்டினா அணியை இந்திய அணி எதிர்கொள்ள உள்ளதால் நிச்சயம் இரு அணிகளும் மோதும் இந்த  போட்டி  பரபரப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.