பாரீஸ் ஒலிம்பிக் 2024:


உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான விளையாட்டு போட்டிகளான ஒலிம்பிக், இந்த முறை பாரிஸில் நடைபெறுகிறது. இது 33வது ஒலிம்பிக் போட்டியாகும். இந்த போட்டி பல வரலாற்று நிகழ்வுகளுடன் தொடங்கியுள்ளது. அதாவது ஒலிம்பிக் வரலாற்றிலேயே இந்த போட்டியில்தான் ஆண் வீரர்களும், பெண் வீராங்கனைகளும் சம அளவில் பங்கேற்றுள்ளனர்.


அதாவது மொத்தம் 10,500 போட்டியாளர்கள் இதில் பங்கேற்றிருக்கின்றனர். இதில் வீராங்கனைகள் 5,250 பேர், வீரர்கள் 5,250 பேர் உள்ளனர் .இந்தியா சார்பில் 117 வீரகள் விளையாடுகின்றனர். அந்த வகையில் இன்று துப்பாக்கிச் சுடுதல், படகுபோட்டி, டென்னிஸ், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், ஹாக்கி, குத்துச்சண்டை ஆகிய போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இதில் மதியம் நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் சரப்ஜோத் சிங், சீமா அர்ஜூன் சிங்க், இளவேனில் வாலறிவன் ஆகியோர் தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்தனர். 


இறுதிச் சுற்றில் மனு பாக்கர்:


இந்நிலையில் தான் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் மனு பாக்கர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அந்தவகையில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில்  60 ஷாட்கள் கொண்ட தகுதிச் சுற்றில் மொத்தம் 580 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். 


முதல் தொடரில் 97, இரண்டாவதாக 97, மூன்றில் 98, நான்காவது 96, ஐந்தில் 96, ஆறாவது தொடரில் 96 மதிப்பெண்கள் பெற்றார். மனு பாக்கரின் இறுதிப் போட்டி நாளை (ஜூலை 28) இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


20 ஆண்டுகளுக்கு பிறகு:


கடந்த 20 ஆண்டுகளில் தனிநபர் போட்டியில் ஒலிம்பிக் இறுதிப் போட்டியை எட்டிய முதல் இந்தியப் பெண் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்திருக்கிறார். கடைசியாக 2004 ஆம் ஆண்டு ஏதென்ஸில் நடந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் சுமா ஷிரூர் இறுதிப் போட்டியை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.