விளையாட்டு போட்டிகளில் இந்தியாவின் சாதனை:
ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்தான் என்றைக்கும் ஒரு தேசம் விளையாட்டுத்துறையில் எட்டியிருக்கும் உயரத்திற்கான அளவீடாக பார்க்கப்படுகிறது. அத்தகைய ஒலிம்பிக்ஸில் ஒருகட்டம் வரைக்கும் இந்தியா சார்பில் ஹாக்கி அணி மட்டுமே பதக்கங்களை வென்று கொடுத்துக் கொண்டிருந்தது. ஆனால், 1980க்கு பிறகு ஹாக்கியிலும் இந்திய அணியால் தேர்ந்த செயல்பாட்டை வெளிப்படுத்த முடியவில்லை. அதிலுமே இந்தியாவிற்குப் பதக்கமே இல்லாமல் போனது.
ஒலிம்பிக்ஸில் ஒட்டுமொத்த பதக்கப்பட்டியலில் இந்தியா என்கிற பெயருக்கு அருகே பூஜ்ஜியம் என்றே சிலகாலத்திற்குப் பதிவாகிக் கொண்டிருந்தது. இதை மாற்றி காட்டியவர் லியாண்டர் பயஸ். 1996-ல் அட்லான்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் தொடரில் டென்னிஸ் போட்டியில் இந்தியா சார்பில் களமிறங்கி வெண்கல பதக்கத்தை வென்றிருந்தார்.
2008-ல் பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸில் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றிருந்தார். தனிப்பட்ட விளையாட்டுகளில் இந்தியா சார்பில் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற முதல் வீரர் அபினவ் பிந்த்ராதான். அதேபோல், கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஒரு தங்கம் வென்றார்.
பி.வி.சிந்து பேட்மிண்டனில் 2016 ரியோ ஒலிம்பிக்ஸில் வெள்ளிப்பதக்கத்தை வென்றவர், 2021-ல் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வெண்கல பதக்கத்தை வென்றிருந்தார். விடுபட்டுபோயிருக்கும் அந்தத் தங்கப்பதக்கத்தை 2024 பாரிஸ் ஓலிம்பிக்ஸில் வென்றுவிட வேண்டும் என்ற வேட்கையோடு களம் இறங்கினார் ஆனால் அது நடைபெறவில்லை.
ஹாக்கி ராஜ்யம்:
1920க்கும் 80க்கும் இடைப்பட்ட ஒலிம்பிக்ஸ் தொடர்களில் மட்டும் இந்திய ஹாக்கி அணி 11 பதக்கங்களை வென்றிருந்தது. அதில் 8 தங்கப்பதக்கங்களும் அடக்கம். 1980 க்கு பிறகு இந்தியாவால் ஒரு பதக்கம் கூட வெல்ல முடியவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாபதக்கம் வென்றதன் மூலம் ஹாக்கியில் இந்தியா 41 ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களை சந்தோசப்படுத்தியது.இச்சூழலில் தான் இந்த ஆண்டு நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றது. ஆனாலும் இந்தியா தனி நபர் விளையாட்டுகளில் சாதிக்க வேண்டிய தூரம் மிக நீண்டதாகவே இருக்கிறது.