தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்:
கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கிய பாரீஸ் ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 11 ஆ தேதி முடிவடைந்தது. முன்னதாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார். அதன்படி இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனையை எதிர்கொள்ள தயாராக இருந்தார். இதனிடையே பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்தி கூறி வந்த சூழலில் மிகப்பெரிய அதிர்ச்சி செய்தி ஒன்று வந்தது.
அதாவது வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மல்யுத்த விதிகளின் படி 50 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்பவர்கள் அந்த எடையை விட கூடுதல் எடையில் இருக்கக் கூடாது. ஆனால் அவர் 100 கிராம் அதிக எடையுடன் இருக்கிறார். இதனால் தான் இந்த தகுதி நீக்கம் என்று ஒலிம்பிக் கமெட்டி அறிவித்தது. அதே நேரம் அமெரிக்கா வீராங்கனை சாராவுக்கு தங்கமும், கியூபா வீராங்கனை லோபஸ் வெள்ளிப் பதக்கமும், சுசாகி வெண்கலமும் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த அதிர்ச்சியில் இருந்த வினேஷ் போகத் சர்வதேச மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெருவதாகவும் தன்னால் இன்னும் போராட முடியாது என்றும் கூறினார்.
140 கோடி இந்தியர்கள் காத்திருக்கிறார்கள்:
இந்நிலையில் வினேஷ் போகத் விளையாட்டு தீர்ப்பாயத்தில் தனது தகுதிநீக்கத்தை எதிர்த்து வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு ஆகஸ்ட் 16 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக வினேஷ் போகத்தின் மாமா மகாவீர் பேசியிருக்கிறார். அதில், "நாங்கள் முடிவுக்காகக் காத்திருக்கிறோம். 140 கோடி இந்தியர்கள் காத்திருக்கிறார்கள், ஆனால் அது மீண்டும் மீண்டும் தாமதமாகிறது. முடிவு எங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்றும், ஒவ்வொரு இந்தியரின் நம்பிக்கைக்கும் வெகுமதி கிடைக்கும் என்றும் நாங்கள் இன்னும் நம்புகிறோம்.
ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற உலக சாம்பியனான வினேஷ் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளார். அவர் குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தையாவது பெற வேண்டும். இறுதிப் போட்டியில் 100 கிராம் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். முடிவு CAS கையில் உள்ளது, ஆனால் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். எந்த விளையாட்டாக இருந்தாலும், தங்கப் பதக்கப் போட்டியில் விளையாடி தகுதி நீக்கம் செய்யப்பட்டால், மனம் உடைந்து விடும். வினேஷ் வீடு திரும்பிய பிறகு, அவளிடம் பேசி, 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்கச் சொல்ல முயற்சிப்போம்" என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக வினேஷ் போகத் தரப்பு மூத்த வழக்கறிஞர் விதுஷ்பத் சிங்கானியா, "நாங்கள் அனைவரும் நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புகிறோம். CAS-இன் தற்காலிகக் குழு 24 மணிநேர காலக்கெடுவைக் கொண்டுள்ளது. அவர்கள் தீர்ப்பின் காலக்கெடுவை நீட்டித்திருப்பதால், இதுகுறித்து தீவிரமாக சிந்திப்பார்க்கள்.
நடுவர் மன்றம் இந்த விஷயத்தில் அதிகம் சிந்திக்கிறது என்றால், அது நமக்கு நல்லது. கடந்தகாலங்களில் நான் CASஇல் பல வழக்குகளில் வாதாடி உள்ளேன். CASஇல் வெற்றி விகிதம் என்பது மிகக் குறைவு. இந்த விஷயத்தில், நாங்கள் நடுவரிடமிருந்து மிக முக்கிய முடிவை எதிர்பார்க்கிறோம். இது கொஞ்சம் கடினம்தான். ஆனால் ஏதாவது நல்லது நடக்கும் என்று நம்புகிறோம். நாம் அனைவரும் வினேஷுக்காக பிரார்த்தனை செய்வோம். அவருக்கு ஒரு பதக்கம் கிடைக்கும் என்று நம்புவோம். ஒருவேளை, அவர் அதைப் பெறாவிட்டாலும், அவர் ஒரு சாம்பியன்” எனத் தெரிவித்துள்ளார்.