வெண்கலம் வென்ற மனு பாக்கர்:
பிரான்ஸில் நேற்று முன் தினம் பிரமாண்டமாக தொடங்கியது 33 வது பாரீஸ் ஒலிம்பிக் தொடர். இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் அதிமான விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். அந்த வகையில் இந்தியா சார்பில் 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இரண்டாம் நாளான இன்று (ஜூலை 28)நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல் பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் வென்று அசத்தினார். இவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்தி தெரிவித்தனர்.
கடைசி வரை நம்பிக்கையை விடவில்லை:
இந்நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் வெண்கலப்பதக்கம் வென்ற மனு பாக்கர் தனது வெற்றி குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "இந்தியாவுக்கு நீண்ட காலமாகக் கிடைக்க வேண்டிய பதக்கம் இது. நான் அதற்கான ஒரு கருவியாக மட்டுமே இருந்தேன் என்றே சொல்ல வேண்டும். இந்தியா இன்னும் அதிகமான பதக்கங்களைப் பெறத் தகுதியானது.
இந்த முறை அதிக பதக்கங்களை வெல்ல முடியும் என நம்புகிறோம். தனிப்பட்ட முறையில் என்னால் இது நம்பவே முடியவில்லை. நான் கடைசி ஷாட் வரை நம்பிக்கையைக் கைவிடவில்லை. தொடர்ந்து முயன்றேன். இந்த முறை வெண்கல பதக்கம் தான் கிடைத்தது. அடுத்த முறை தங்கம் வெல்வேன்" என்று கூறினார்.
வெற்றிக்கு காரணம் பகவத்கீதை தான்:
அப்போது அவரிடம் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியின் கடைசி சில நிமிடங்கள் எப்படி இருந்தது? அதை எப்படிக் கையாண்டீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நான் பகவத்கீதையை எப்போதும் படிப்பேன் அது எனது மனதிலேயே இருந்துவிட்டது. நீ எதைச் செய்ய வேண்டுமா அதை மட்டும் செய் என்ற பகவத்கீதை வரி தான் எனக்குள் ஓடிக் கொண்டு இருந்தது. உங்களால் செய்ய முடிந்ததைச் செய்யுங்கள் மற்றதை விட்டுவிடுங்கள்.
விதியை உங்களால் மாற்றவே முடியாது இதுதான் எனது மனதில் ஓடியது. நீங்கள் கர்மாவில் கவனம் செலுத்த வேண்டும் இதனால் என்ன கிடைக்கும் என்பதை யோசிக்கக் கூடாது அதுவே எனது மனதில் ஓடிக் கொண்டு இருந்தது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் என்னால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. இதனால் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். அதில் இருந்து மீண்டு வர தாமதம் ஆனது. ஆனால், போனவை போகட்டும். அது கடந்த காலம் இனி நிகழ்காலத்தில் கவனம் செலுத்துவோம் என்று முடிவு செய்தேன். இந்த பதக்கம் என்பது டீம் வொர்க் தான். அதில் நான் வெறும் கருவி மட்டம் தான்" என்று கூறியுள்ளார் மனு பாக்கர்.