பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து வரும் பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார் ஹரியானாவை சேர்ந்த மனு பாக்கர். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் துப்பாக்கி சுடுதலில் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார் மனு பாக்கர்.
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஒருவர் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை. உலக விளையாட்டு அரங்கில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பல முறை பதக்கங்களை வென்றுள்ளார் மனு பாக்கர்.
ஆனால், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகே, ஒட்டுமொத்த தேசமே அவரை நோக்கி திரும்பியுள்ளது. இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் மனு பாக்கர் பதிவிட்ட பழைய பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது. பாஜகவை விமர்சித்தது தொடங்கி மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது வரை அவரின் பல்வேறு பதிவுகள் வைரலாகி வருகின்றன.
பாஜக அமைச்சரை வம்புக்கு இழுத்த மனு பாக்கர்: கடந்த 2018ஆம் ஆண்டு, போட்டி ஒன்றில் வெற்றிபெற்றதற்காக மனு பாக்கருக்கு ஹரியானா பாஜக அரசு பரிசுத்தொகை அறிவித்திருக்கிறது. அப்போதைய அமைச்சர் அனில் விஜ், இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
"யூத் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற மனு பாக்கருக்கு வாழ்த்துகள். இந்த தங்கத்திற்காக மனு பாகருக்கு ஹரியானா அரசு ரூ.2 கோடி பரிசு வழங்கவுள்ளது. முந்தைய அரசுகள், ரூ. 20 லட்சம் மட்டுமே பரிசுத்தொகை வழங்கி வந்தது" என எக்ஸ் தளத்தில் அனில் விஜ் பதிவிட்டிருந்தார்.
இதற்கு மனு பாக்கர், "இது உண்மைதானா? இல்லை. பொய் வாக்குறுதியா?" என எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு கடுமையாக எதிர்வினையாற்றிய அனில் விஜ், "பொது தளத்தில் பதிவிடுவதற்கு முன்பு, இதை முதலில் விளையாட்டுத் துறையிடம் மனு பாக்கர் உறுதி செய்திருக்க வேண்டும்.
மல்யுத்த வீரர்களின் போராட்டத்துக்கு ஆதரவு: நாட்டிலேயே உயரிய விருதுகளை வழங்கும் மாநில அரசைக் கண்டிப்பது வெட்கக்கேடானது. நான் ட்வீட் செய்தபடியும் அந்த நேரத்தில் அறிவிக்கப்பட்டபடியும், பாக்கருக்கு 2 கோடி ரூபாய் கிடைக்கும். வீரர்களிடம் ஒழுக்க உணர்வு இருக்க வேண்டும். இந்த சர்ச்சையை உருவாக்கியதற்காக பாக்கர் வருத்தப்பட வேண்டும். அவர் செல்ல வேண்டிய தூரம் அதிகம். அவர் விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்" என பதிவிட்டிருந்தார்.
அப்போதைய பாஜக எம்பியும் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர்களின் போராட்டம் உச்சத்தில் இருந்த சமயத்தில், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் மனு பாக்கர்.
"பலமுறை பதக்கம் வென்று தேசத்தை பெருமைப்படுத்திய எனது சக விளையாட்டு வீரர்கள் (மல்யுத்த வீரர்கள்) இப்போது நீதி கேட்டு சாலைகளில் அமர்ந்திருப்பதைக் கண்டு நான் மிகவும் வேதனைப்படுகிறேன். எனது சக விளையாட்டு வீரர்களுடன் நான் உறுதியாக நின்று அவர்களின் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என எக்ஸ் தளத்தில் மனு பாக்கர் பதிவிட்டிருக்கிறார்.
தற்போது, ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றதை தொடர்ந்து மனு பாக்கரின் இந்த பதிவுகள் வைரலாகி வருகின்றன.