கடந்த ஜூன் 26 ஆம் தேதி தொடங்கிய பாரீஸ் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல் ஏர் பிஸ்டல் 10 மீட்டர் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். யார் இவர்? இவர் இதுவரை செய்த சாதனைகள் என்ன என்பது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் மல்யுத்த வீரர்களுக்கு பெயர் பெற்ற மாநிலமான ஹரியானாவின் ஜஜ்ஜரில் 2002 ஆம் ஆண்டு பிறந்தவர் மனு பாக்கர். பள்ளியில் டென்னிஸ், ஸ்கேட்டிங் மற்றும் குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தவர்.அதேபோல்'தாங் தா' எனப்படும் தற்காப்புக் கலைகளில் பங்கேற்று, தேசிய அளவில் பதக்கங்களை வென்றுள்ளார்.


துப்பாக்கிச்சுடுதலில் ஈடுபாடு எப்படி வந்தது?


மனு பாக்கருக்கு துப்பாக்கிச்சுடுதலில் ஆர்வம் வந்தது கடந்த 2016 ஆம் ஆண்டு தான். தன்னுடைய 14வயதில் தான் துப்பாக்கிச்சுடுதலை விரும்பி தேர்ந்தெடுத்திருக்கிறார். ஸ்போர்ட்ஸ் ஷூட்டிங் கைத்துப்பாக்கியை வாங்கித் தருமாறு தன் தந்தையிடம் பிடிவாதம் செய்து அதை பெற்றிருக்கிறார். நிச்சயம் நீ ஒரு நாள் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வாய் மகளே என்று சொல்லியபடி இவருடைய தந்தை ராம் கிஷன் பாக்கர் ஸ்போர்ட்ஸ் ஷூட்டிங் கைத்துப்பாக்கியை வாங்கி கொடுத்திருக்கிறார்.




2017 தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மானு பாக்கர்  ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றவரும் முன்னாள் சாம்பியனுமான ஹீனா சித்துவை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் சித்துவின் சாதனையை 242.3 என்ற முறையில் முறியடித்தார். பின்னர் 2017 ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.


தங்க மங்கையாக ஜொலித்த மனு பாக்கர்:


இதனைத்தொடர்ந்து மெக்ஸிகோவின் குவாடலஜாராவில் நடந்த சர்வதேச விளையாட்டு துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு (ISSF) உலகக் கோப்பையில் அறிமுகமானர். இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அந்த போட்டியின் போது ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அன்னா கோரகாக்கி, மூன்று முறை உலகக் கோப்பைப் பதக்கம் வென்ற செலின் கோபர்வில்லி மற்றும் இறுதிப் போட்டியில்அலெஜான்ட்ரா ஜவாலா ஆகியோரை வீழ்த்திமொத்தம் 237.5 புள்ளிகளை பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார். 


16 வயதில், ISSF உலகக் கோப்பையில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் மிகவும் இளம் வயதில் தங்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். அதேபோல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு போட்டியில் மனு பாக்கர், ஓம் பிரகாஷ் மிதர்வாலுடன் ஜோடி சேர்ந்து தனது இரண்டாவது தங்கத்தை வென்றார். அதோடு  10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் தனிநபர் மற்றும் கலப்பு குழு போட்டியில் தங்கப் பதக்கங்களையும் வென்று அசத்தினார்.


ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் நடந்த 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் தங்கப் பதக்கத்தை வென்ற மனு பாக்கர் புதிய வரலாறு படைத்தார். தனது இரண்டாவது ISSF ஜூனியர் உலகக் கோப்பையில் 10 மீ ஏர் பிஸ்டல் போட்டியில் மற்றொரு தங்கம் வென்றார், கலப்பு குழு போட்டியில் வெண்கலம் வென்ற இவர் 25 மீ பிஸ்டல் போட்டியில் பதக்கத்தைத் தவறவிட்டார்.



2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெறவில்லை என்றாலும், 2018 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் நடந்த யூத் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்றுள்ளார்.  யூத் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை என்ற சாதனையையும் இதன் மூலம் படைத்தார். 2019 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ISSF உலகக் கோப்பையில் சௌரப் சௌத்ரியுடன் இணைந்து தங்கம்  சீனாவில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில்,தனிநபர் மற்றும் கலப்பு அணி பிரிவில் தங்கம் என்று தொடர்ந்து பல சாதனைகளை படைத்தார்.


டோக்கியோவில் ஜஸ்ட் மிஸ்..பாரீஸில் நனவாகிய கனவு:


டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் பயிற்சியாளருடன் கடைசி நிமிடம் ஏற்பட்ட மோதல், துப்பாக்கி பழுதானது உள்ளிட்ட காரணங்களால் பதக்கம் வெல்வதில் இருந்து தவறினார். இச்சூழலில் தான் 2023 ஆம் ஆண்டு சாங்வானில் நடந்த ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் இல் பெண்களுக்கான 25 மீ பிஸ்டல் போட்டியில் ஐந்தாவது இடத்தைப் பிடித்து இந்தியாவிற்கான பாரீஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் பங்கு பெறும் வாய்ப்பை பெற்றார்.


இந்தியாவின் பெருமை:


கடந்த 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தவற விட்ட பதக்கத்தை தற்போது வென்று அசத்தி உள்ளார் மனு பாக்கர். ஒலிம்பிக் வரலாற்றில் துப்பாக்கி சூடுதல் போட்டியில் இந்தியா வென்றுள்ள 5ஆவது பதக்கம் இதுவாகும். மனு பாக்கர் துப்பாக்கி சுடுதல் இறுதி போட்டியில் மொத்தம் 221.7 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கத்தை வென்றார். முதல் 2 இடங்களை கொரியா வீராங்கனைகள் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.