அமெரிக்காவின் மிகவும் முக்கியமான கால்பந்து தொடர் என்றால் அது கோபா அமெரிக்க கால்பந்து தொடர் தான். இந்தாண்டு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரேசில் நாடுகள் மோதின. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி பிரேசில் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. இதன்மூலம் பிரேசில் அணியை அதன் சொந்த மண்ணில் 2500 நாட்களுக்கு பிறகு தோற்கடித்த முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. கடைசியாக பிரேசில் அணி 2500 நாட்களுக்கு முன்பாக தன்னுடைய சொந்த மண்ணில் தோல்வி அடைந்தது.
அர்ஜென்டினா அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு கோபா அமெரிக்க தொடரை வென்று அசத்தியுள்ளது. இதற்கு முன்பாக 1993ஆம் ஆண்டு நடைபெற்ற கோபா அமெரிக்க தொடரில் மெக்சிகோ அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின்னர் 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இக்கோப்பையை வென்று உள்ளது. இந்த வெற்றி அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான மெஸ்ஸிக்கு மிகவும் முக்கியமான ஒன்று.
ஏனென்றால் தன்னுடைய 13 வயதிலிருந்து கால்பந்து விளையாட்டில் இருக்கும் மெஸ்ஸிக்கு அர்ஜென்டினா அணிக்காக ஒரு சர்வதேச கோப்பையை வெல்ல வேண்டும் என்று நீண்ட நாள் கனவு ஒன்று இருந்தது. அந்த கனவு கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்கு நிறைவேறாமல் இருந்தது. லா லிகா தொடரில் பார்சிலோனா அணிக்காக 10 முறை அவர் கோப்பை வென்றுள்ளார்.
எனினும் தன்னுடைய சொந்த நாடான அர்ஜென்டினாவிற்கு ஒரு முறை கூட கோப்பை வெல்லவே முடியாமல் இருந்தார். 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோவில் நடைபெற்ற கால்பந்து உலக கோப்பை போட்டிகளில் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக களமிறங்கினார். அப்போது ஜெர்மனி அணியிடம் 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி தோல்வி அடைந்தது. இந்த சோகம் அவருக்கு எப்போதும் ஆறாத துயரமாக அமைந்தது.
இந்தச் சூழலில் இன்றைய கோபா அமெரிக்கா வெற்றியின் மூலம் நீண்ட நாட்களாக சர்வதேச கோப்பையை வெல்லாமல் இருந்த மெஸ்ஸியின் கனவும் தற்போது நிறைவேறியுள்ளது. அர்ஜென்டினா அணிக்காக அவர் வெல்லும் முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும். இதற்கு முன்பாக 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் தங்கம் வென்ற அர்ஜென்டினா அணியில் அவர் இடம்பெற்று இருந்தார். இந்தத் தொடரில் 4 கோல்கள் அடித்த மெஸ்ஸி மற்றும் நெய்மர் தொடரின் நாயகர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மெஸ்ஸியின் இந்த பட்டத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,”பல ஆண்டுகளாக தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மெஸ்ஸி நமக்கு ஆனந்தத்தை தந்துள்ளார். உலகிலேயே மிக சிறந்த வீரர்களுள் ஒருவர் அவர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சிறப்பாக விளையாடிய அர்ஜென்டினா அணிக்கு எனது வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
கால்பந்து உலகில் மற்றொரு ஜாம்பவான் வீரராக கருதப்படும் கிறிஸ்டியானா ரொனால்டோ போர்ச்சுகல் அணிக்காக ஜூலை 10 2016ஆம் ஆண்டு தன்னுடைய முதல் கோப்பையை வென்று இருந்தார். அதேபோல் ஜூலை 10 2021ஆம் ஆண்டு மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக தன்னுடைய முதல் கோப்பையை வென்றுள்ளார். இதையும் ஒரு ரசிகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருவரையும் ஒன்றாக ஒப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க:கோபா அமெரிக்கா: 28 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா சாம்பியன்; மெஸ்ஸிக்கு முதல் சர்வதேச கோப்பை !