சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மாரியப்பனை உற்சாகப்படுத்தும் நோக்கில் சேலத்தை சேர்ந்த மேங்கோ கால் டாக்ஸி நிறுவனம் சேலத்தில் மாரியப்பன் என்ற பெயர் உள்ளவர்கள் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய மூன்று நாட்களும் மேங்கோ கால் டாக்ஸியில் சேலம் மாவட்டத்திற்கு எங்கு வேண்டுமானாலும் இலவசமாக பயணிக்கலாம் என்று சூப்பர் ஆஃபர் கொடுத்துள்ளனர்.



இந்த சிறப்பு சலுகை குறித்து சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகின்றது. இதுகுறித்து மேங்கோ கால் டாக்ஸி உரிமையாளர் நித்தியானந்தம் கூறுகையில், கடந்த 8 ஆண்டுகளாக மேங்கோ கால் டாக்ஸி நிறுவனம் சேலத்தில் செயல்பட்டு வருகிறது. விளையாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், சேலத்தை சேர்ந்த மாரியப்பன் வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு பாராட்டும் வகையிலும், கடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது போல அடுத்த பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வெல்ல வேண்டும் என்பதற்காக மேங்கோ கால் டாக்ஸி நிறுவனம் 14, 15, 16 ஆகிய தேதிகளில் சேலம் மாவட்டத்தில் உள்ள மாரியப்பன் என்று பெயர் உள்ளவர்களுக்கு இலவசமாக சேலம் மாவட்டத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார். மேலும் மாரியப்பன் போன்று சேலத்தில் பல இளைஞர்கள் உள்ளதாகவும் அவர்கள் அனைவரும் விளையாட்டில் சாதனை படைக்க வேண்டும் என்று விரும்புவதாக கூறினார்.



சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று கடந்த ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊரான சேலம் மாவட்டம் காடையாம்பட்டி திரும்பினார். மாரியப்பனுக்கு சேலம் மக்கள் பட்டாசுகள் வெடித்தும் , தேங்காய் உடைத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அரசு சார்பில் மாரியப்பனுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் சென்று வாழ்த்து கூறினார். அப்போது பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.



பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் தொடர்ந்து பரிசு மற்றும் பாராட்டுகளை வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு அளித்து வருகின்றனர். சேலத்தை சேர்ந்த மாரியப்பன் கடந்த முறை ரியோ பாரா ஒலிம்பிக்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றார் . தமிழகத்திலிருந்து டோக்கியோ பாரா ஒலிம்பிக் 2020 போட்டியில் ஒரே ஒரு வீரர் மட்டுமே கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.