இந்தியத் தடகள சம்மேளனம் கடந்த செப்டம்பர் 13 அன்று, தேசிய ஜாவ்லின் விளையாட்டுப் பயிற்சியாளர் உவே ஹான் பதவியில் இருந்து நீக்கப்படுவதாகவும், அவரது பணி திருப்திகரமாக இல்லை எனவும் கூறியுள்ளது. அவருக்குப் பதிலாகப் புதிதாக இரண்டு வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுவர் எனவும் கூறப்பட்டுள்ளது. 


ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த உவே ஹானுக்கு வயது 59. முன்னாள் சர்வதேச சாதனையாளரான அவரின் ஒப்பந்தம் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் முடிவடையும் போது முடிந்தது. ``உவே ஹானின் பணியில் திருப்தியில்லாததால், அவரை மாற்றம் செய்கிறோம். புதிதாக இரண்டு பயிற்சியாளர்களை நியமிக்க உள்ளோம். மேலும், ஷாட்புட் விளையாட்டு வீரர் டஜிந்தர்பால் சிங் டூருக்கு வெளிநாட்டில் இருந்து பயிற்சியாளரை வரவழைக்கவுள்ளோம்’ என இந்தியத் தடகள சம்மேளனத்தின் தலைவர் அடில் சுமரிவாலா கூறியுள்ளார். 


அடில் சுமரிவாலா இதனை தடகள சம்மேளனத்தின் இரண்டு நாள் செயற்குழு சந்திப்பின் இறுதியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். அவருடன் தடகள சம்மேளனத் திட்டக் குழுவின் தலைவர் லலித் பானோர், துணைத் தலைவர் அஞ்சு பாபி ஜார்ஜ் முதலானோர் இருந்தனர். 



உவே ஹான்


 


கடந்த 2017ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் உவே ஹான் ஓர் ஆண்டிற்குத் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவர் தற்போது ஒலிம்பிக்ஸ் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கும், ஒலிம்பிக்ஸ் போட்டியாளர்கள் சிவ்பால் சிங், அன்னு ராணி ஆகியோருக்கும் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார். 


2018ஆம் ஆண்டு, காமன்வெல்த் போட்டிகளிலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளராகவும் உவே ஹான் பணியாற்றி வந்தார். அதன் பிறகு, மற்றொரு ஜெர்மானியப் பயிற்சியாளரான கிளாஸ் பார்டோனியட்ஸிடம் நீரஜ் சோப்ரா பயிற்சி பெற்றார். 


ஒலிம்பிக்ஸ் பந்தயத்திற்கு முன்பு, உவே ஹான் தனது ஒப்பந்ததை இந்திய விளையாட்டு ஆணையமும், தடகள சம்மேளனமும் மிரட்டிப் பெற்றதாகப் பேசியது சர்ச்சையானது. இந்த இரு நிறுவனங்களும் உவே ஹானின் குற்றச்சாட்டை மறுத்துள்ளன. `நான் இங்கே வந்த போது, என்னால் மாற்றத்தை உருவாக்க முடியும் என எண்ணினேன். எனினும், இந்திய விளையாட்டு ஆணையம், தடகள சம்மேளனம் ஆகியவற்றை நடத்துபவர்களுடன் இணைந்து பணியாற்றுவது கடினமாக இருக்கிறது. அறிந்து செய்கிறார்களா, அறியாமையில் செய்கிறார்களா என்று தெரியவில்லை. போட்டிகள் நடைபெறும் போது தவிர, ஊட்டச்சத்து நிபுணர்களையோ, நல்ல உணவையோ கேட்டால், அவை சரியாகக் கிடைப்பதில்லை. மத்திய விளையாட்டுத் துறையால் தேர்ந்தெடுக்கப்படும் ஒலிம்பிக்ஸ் போட்டியாளர்களுக்கும் இதுதான் நிலை’ என்று அவர் பேசியிருந்தார். 



நீரஜ் சோப்ராவுடன் உவே ஹான்


 


டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்கள் வென்றிருந்த நீரஜ் சோப்ரா கிளாஸ் பார்டோனியட்ஸிடம் பயிற்சி பெற்றிருந்த போதும், தனது வெற்றிக்குப் பிறகு, `பயிற்சியாளர் ஹானுடன் செலவிட்ட நேரம் நல்லபடியாக இருந்தது. அவர் சிறந்த மனிதர். அவரை மதிக்கிறேன். அவரது பயிற்சி முறைகள் மாறுபட்டவை. அவரால் காமன்வெல்த் போட்டியிலும், ஆசிய விளையாட்டுகளிலும் தங்கப் பதக்கம் வென்றேன். கிளாஸிடம் பயின்றபோது, ஹானின் பயிற்சி முறை எனக்குப் பொருத்தமாக இருந்ததாக உணர்ந்தேன்’ எனப் பேட்டியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.