டோக்கியோ பாராலிம்பிக் பாரா பேட்மிண்டன் போட்டியில் நேற்று ஆடவருக்கான எஸ்.எல் 3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் அதே பிரிவில் இந்தியாவின் மனோஜ் சர்கார் வெண்கலப்பதக்கத்தை வென்றார். அதன்பின்னர் ஆடவர் எஸ்.எல் 4 பிரிவில் இந்தியாவின் சுஹேஷ் யேத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். அதேபோல் இந்தச் சூழலில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் மற்றும் பாலக் கோலி ஆகிய இருவரும் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்து வெண்கலப்பதக்க போட்டியில் விளையாட தகுதி பெற்றனர். 


இந்நிலையில் இன்று நடைபெற்ற வெண்கலப்பதக்க போட்டியில் பிரமோத் பகத் மற்றும் பாலக் கோலி ஜோடி ஜப்பானின் ஃபூஹிஹாரா மற்றும் சுகினோ இணையை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் முதல் கேமில் இரு ஜோடிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் ஜப்பான் ஜோடி 23-21 என்ற கணக்கில் வென்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது கேமிலும் இரு ஜோடிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த கேமையும் 21-19 என்ற கணக்கில் ஜப்பான் ஜோடி வென்றது. அத்துடன் வெண்கலப்பதக்கத்தையும் வென்றது. ஏற்கெனவே தங்கம் வென்ற பிரமோத் பகத் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவர் வெல்லாமல் ஏமாற்றம் அளித்துள்ளார்.


 






முன்னதாக ஆடவர் எஸ்.ஹெச் 6 பிரிவு பாரா பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் ஹாங்காங் சீனாவின் சு மான் கையை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிருஷ்ணா நாகர் 21-17, 15-21, 21-16 என்ற கணக்கில் வென்று தங்கப்பதக்கத்தை பெற்றார். இதன்மூலம் டோக்கியோ பாரா பேட்மிண்டனில் இந்தியாவிற்கு இரண்டாவது தங்கத்தை பெற்று தந்துள்ளார். ஏற்கெனவே நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் தங்கம் வென்று இருந்தார். 


மேலும் படிக்க:உயரமா தடை? உயர்ந்தார் கிருஷ்ணா நாகர்.. பாரா பேட்மிண்டனில் தங்கம் வென்ற பெருமைக்கதை.!