விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த வகையில் இந்திய அணி விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றி வாகை சூடி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.


உலகக் கோப்பையில் மிரட்டும் ஷமி:


இச்சூழலில், நவம்பர் 12 ஆம் தேதி நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. முன்னதாக, இந்த தொடரில் சிறப்பாக தன்னுடைய பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார் இந்திய பந்து வீச்சாளர் முகமது ஷமி. தன்னுடைய பந்து வீச்சால் எதிரணி வீரர்களை மிரள வைத்து வருகிறார்.


அதன்படி, 4 போட்டிகளில் விளையாடியுள்ள அவர்  16 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோல், இரண்டு போட்டிகளில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இச்சூழலில், முகமது ஷமியை பலரும் வாழ்த்தி வரும் நிலையில் அவரது முன்னாள் மனைவி கூறியுள்ள கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


வாழ்த்து கூற முடியாது:






ஷமியின் முன்னாள் மனைவி ஹாசின் ஜஹான் பேசுகையில், ”இந்த  முறை உலகக் கோப்பையை வெல்வதற்காக இந்திய அணியை வாழ்த்துகிறேன். ஆனால் முகமது ஷமிக்கு என்னால் வாழ்த்து கூற முடியாது. அதேபோல் முகமது ஷமி நன்றாக விளையாடினால், இந்திய அணியில் தொடர்ந்து நீடிப்பார். இந்திய அணியில் இருந்தால் நன்றாக சம்பாதிக்க முடியும். அது அவருக்கும், எங்கள் மகள் (ஆயிரா) நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுக்கும்” என்று கூறினார்.


நெட்டிசன்கள் எதிர்ப்பு:


முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைக்கு முன் இந்திய பந்து வீச்சாளர் முகமது ஷமி ஏராளமான பிரச்சனைகளை சந்த்தித்து வந்தார். அதில், முக்கியமாக அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகள் நீடித்து வந்தன.  


இச்சூழலில் ஷமி மீது அவரது மனைவி  மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டுகள், வரதட்சணை கொடுமை, பாலியல் குற்றச்சாட்டுகள், குடும்ப வன்முறை என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இது முகமது ஷமியை வெகுவாக பாதித்தது.


இதனால் அவர் இந்திய அணியில் விளையாடாமல் நிறுத்தி வைக்கப்பட்டார். அதன்பின் பிசிசிஐ விசாரணையில், முகமது ஷமி மனைவி ஹாசின் ஜஹான் முன் வைத்த அனைத்து குற்றச்சாட்டுகள் பொய் என்பது தெரிய வர அதன்பின் ஷமியுடன் மீண்டும் ஒப்பந்தம்  செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தற்போது முகமது ஷமி இந்திய அணிக்காக சரியாக விளையாடி வரும் சூழலில், மீண்டும் அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் இது போன்ற கருத்துகளை கூறி வருவதை ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர். நீங்கள் வாழ்த்து சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, அவரை நிம்மதியாக விளையாட விடுங்கள் என்பது போன்ற கருத்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.