அரசு அங்கன்வாடி மையத்தில் ஆய்வுக்கு சென்ற போது தனது குழந்தைக்கு கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு உணவு ஊட்டிவிட்டார். தன்னுடன் வருவதாக குழந்தை அடம் பிடித்ததை தொடர்ந்து குழந்தையை வீட்டிற்கு அழைத்து சென்றார்.
கிருஷ்ணகிரி கலெக்டர் கே.எம்.சரயு, மகள் மிலி (2 வயது). இந்நிலையில், கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் தமிழக அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார். முதலில் காவேரிப்பட்டினம் அரசு சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர், பின்னர் அதற்கு அருகில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.
அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு முறையாக உணவு வழங்கப்படுகிறதா, ஆசிரியர்கள் மற்றும்
மாணவர்களின் வருகை பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்த கலெக்டர், அங்கு தன்னுடைய
மகள் படிப்பதை பார்த்து ரசித்தார். பின்னர் அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும் உணவை தனது மகள் மிலிக்கு ஊட்டிய கலெக்டர் ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். அப்போது ஆட்சியரின் மகள் மிலி தன்னையும் அழைத்துச் செல்லுமாறு கலெக்டரிடம் அடம் பிடித்து அழுதார். பின்னர் உணவு அருந்திய பிறகு தன்னுடைய மகளை அங்கன்வாடி மையத்தில் இருந்து கலெக்டர் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.
பின்னர் தன்னுடைய மகளுடன் ஆய்வு பணிகளை தொடர்ந்தார். கலெக்டர் குழந்தை அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்ந்திருப்பது, சாதாரண மக்களுக்கு அரசு பள்ளிகளின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.