சுஷ்மிதா சென்


மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றவரான பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தற்போது மீண்டும் ஒரு புதிய காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ளார். ரோமன் சால் என்பவருடன் 2018லிருந்து உறவில் இருந்து வந்தார் சுஷ்மிதா சென். தன்னை விட பத்து வயது குறைவான ரோமன், மிகுந்த பொறுப்புணர்வு உள்ள ஒரு மனிதனாகவும் எந்த ஒரு விஷயத்திலும் ஆழ்ந்து சிந்திக்கக் கூடிய ஒருவராக இருப்பது தனக்கு மிக ஆச்சரியம் அளித்தது என்று அவரைப் பாராட்டி சுஷ்மிதா முன்னதாகக் கூறியுள்ளார்.


ஆனால் கடந்த ஆண்டு  இந்த ஜோடி பிரிந்தனர். ரெனீ, அலிஷா என்ற இரு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் சுஷ்மிதா சென், கடந்த ஆண்டு தன்னுடைய முன்னாள் காதலர் ரோமனுடனான தன்னுடைய உறவை முடித்துக் கொண்டதாக சமூக வலைதளத்தில் தெரிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.


லலித் மோடியுடன் காதல்


இதனைத் தொடர்ந்து ஐ.பி.எல் நிறுவனர் லலித் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  தான் சுஷ்மிதா சென் உடன் உறவில் இருப்பதாகப் பதிவிட்டதை அடுத்து சமூக வலைதளம் முழுவதும் பரபரப்பாகியது. தாங்கள் இருவரும் உறவில் இருப்பதாகவும், இன்னும் திருமணம் அளவுக்கு செல்லவில்லை என்றும், எனினும் அதுவும் ஒருநாள் நடக்கும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.


இதனைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து பல்வேறு புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டு வந்தனர். சுஷ்மிதா லலித் மோடியைவிட பத்து வயது சிறியவர் என்பது சினிமா ரசிகர்களின் கவனமீர்த்து பேசுபொருளானது. லலித் மோடி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் சுஷ்மிதாவை, தனது சரி பாதி என்றும் இருவரும் காதலில் உள்ளதால் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை ஆனால், கடவுளின் அருளால் நாங்கள் இருவரும் ஒன்றிணையலாம் என்றெல்லாமும் பதிவிட்டிருந்தார்.


லலித் மோடியுடன் ப்ரேக் அப்


இந்நிலையில், நீண்ட நாட்களாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய டிஸ்ப்ளே பிக்ச்சரில் சுஷ்மிதா சென் உடனான புகைப்படத்தை வைத்திருந்த லலித் மோடி திடீரென இந்த புகைப்படத்தை நீக்கினார். இதனைத் தொடர்ந்து சுஷ்மிதா மற்றும் லலித் ஆகிய இருவரும் காதல் உறவை முடித்துக் கொண்டதாக இணையதளத்தில் பேச்சு எழுந்தது. ஆனால் இது தொடர்பாக இருவரும் தங்கள் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்காதது இந்த குழப்பங்களை நீடிக்கச் செய்தது.


மீண்டும் ரோமனுடன் கைகோர்த்த சுஷ்மிதா


தற்போது பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் ரமேஷ் தரெளனியின் தீபாவளி பார்ட்டியில் கலந்துகொண்ட சுஷ்மிதா சென், தன்னுடைய முன்னாள் காதரான ரோமனுடன் கைகோர்த்தபடி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.


தன்னுடைய முன்னாள் காதலருடன் சுஷ்மிதா மீண்டும் இணைந்துள்ளதாக சமீப காலமாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் இந்தத் தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது இருவரின் வருகை. முன்பு இந்தத் தம்பதியினர் பிரிந்தபோது சோகமடைந்த ரசிகர்கள் அனைவரும் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.