விறுவிறுப்பாக தொடங்கிய ஐசிசி உலகக் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் ஒவ்வொரு லீக் போட்டிகளும் அனல் பறந்தது என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில் பந்து வீச்சிலும் , பேட்டிங்கிலும் சில வீரர்கள் எதிரணி வீரர்களை மிரட்டினார்கள்.
இதில், இந்திய அணி, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா,நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
முதல் இடம் ரச்சின்:
தற்போதையை நிலவரப்படி அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரா, தென்னாப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் இரண்டாவது இடத்திலும், விராட் கோலி மூன்றாவது இடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் நான்காவது இடத்திலும், ரோகித் சர்மா ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
முதல் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரா இதுவரை 9 இன்னிங்ஸில் விளையாடி உள்ளார். இதில் மொத்தம் 565 ரன்களை குவித்துள்ளார். அதில், இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு சதம், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு சதம் , பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு சதம் என மொத்தம் 3 சதங்களை விளாசியிருக்கிறார்.
இரண்டாம் இடம் குயின்டன் டி காக்:
இரண்டாம் இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் 550 ரன்கள் குவித்திருக்கிறார். இதில், இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்தார். அடுத்ததாக நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் 109 ரன்களை குவித்தார். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய குயின்டன் டி காக் 140 பந்துகளில் 174 ரன்களை குவித்தார்.
அதேபோல், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 116 பந்துகள் களத்தில் நின்ற இஅவர் 114 ரன்களை குவித்து அசத்தினார். இவ்வாறாக இந்த தொடரில் 4 சதங்களை அதிரடியாக விளாசி இந்த பட்டியில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இன்று நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை கணக்கில் கொள்ளாமல் அவர் இந்த பட்டியில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
மூன்றாவது இடம் விராட் கோலி:
மூன்றாவது இடத்தில் உள்ள இந்திய வீரர் விராட் கோலி 543 ரன்கள் எடுத்துள்ளார். அதன்படி, வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஒரு சதம், அதேபோல் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் ஒரு சதம் என மொத்தம் இரண்டு சதம் அடித்து இருக்கிறார். இச்சூழலில், நெதர்லாந்து அணியுடன் ஒரு லீக் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
நான்காவது இடம் டேவிட் வார்னர்:
நான்காவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 446 ரன்களுடன் இருக்கிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 163 ரன்கள் எடுத்து முதல் சதத்தை பதிவு செய்தார். நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 104 ரன்கள் என இரண்டு சதத்தை பூர்த்தி செய்திருக்கிரார்.
இதனிடையே நாளை நடைபெறும் போட்டியில் கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வங்கதேச அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
ஐந்தாவது இடம் ரோகித் சர்மா:
ஐந்தாவது இடத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார். அதன்படி 8 இன்னிங்ஸ்கள் விளையாடி உள்ள அவர் 442 ரன்கள் எடுத்திருக்கிறார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 131 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சூழலில், இந்த உலகக் கோப்பை தொடர் முடிவின் போது அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் யார் முதல் இடத்தை பெறுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.