தீபாவளி ஸ்பெஷல் திரைப்படமாக திரைக்கு வந்துள்ள படம் கார்த்திக் சுப்பராஜின் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா திரைப்படம் ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் படமாக வெற்றி பெற்றது. கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் தற்போது தீபாவளி விருந்தாக வெளியாகியுள்ளது 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'.
சந்தோஷ் நாராயணன் இசையில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தோடு அமைந்துள்ளது. இன்று காலை 9 மணிக்கு திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த வகையில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் தள பக்கம் மூலம் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
"கடவுள் நமக்கு தந்த சிறந்த பரிசு யானைகள் & சினிமா! இந்தப் படம் சினிமா மற்றும் பார்வையாளர்களின் சக்தியைப் பற்றிய எங்களின் இதயபூர்வமான சித்தரிப்பு.
நாங்கள் படத்தை எடுக்கும்போது எந்த அளவுக்கு ரசித்து எடுத்தோமோ அதே போல நீங்கள் இந்தப் படத்தை விரும்புவீர்கள் என நம்புகிறோம்.
4.5 ஆண்டுகளுக்கு பிறகு படம் பார்க்க திரையரங்கில் என் படம் வெளியானது எமோஷனலாக சந்தோஷமாக இருந்தது. படத்தை திரையரங்குகளில் பார்க்கவும். அதில் உள்ள சிறிய ஆச்சரியங்களை வெளிப்படுத்த வேண்டாம்..." எனப் பதிவிட்டுள்ளார்.