பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டிகள், 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருந்தது. இந்நிலையில், இன்று தொடங்க இருந்த முதல் ஒரு நாள் போட்டி ரத்து செய்யப்பட்டது மட்டுமின்றி, ஒரு நாள் மற்றும் டி-20 தொடர்களில் இருந்து விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 


2003-ம் ஆண்டை அடுத்து, கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட சென்றுள்ளது. ராவல்பிண்டி மைதானத்தில் தொடங்க இருந்த முதல் ஒரு நாள் போட்டியில், டாஸ் போடுவதற்கு சில நிமிடங்கள் முன்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அளித்துள்ளது. “பாதுகாப்பு காரணஙக்ளுக்காக” என சுட்டிக்காட்டி தொடரில் இருந்து விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் அறிவித்துள்ளது. 


போட்டி தொடங்குவதற்கு முன்பு, மைதானத்தில் குண்டு இருப்பதாக வெளியான தகவலையொட்டி, வீரர்கள் அனைவரும் ஹோட்டல் ரூம்களிலேயே தங்க வைக்கப்பட்டனர். இதனால் ரசிகர்களும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட்டைச் சேர்ந்த அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டதில், குண்டு வைத்திருப்பது தொடர்பான தகவல் போலியான செய்தி என உறுதி செய்யப்பட்டது. இதனால், ராவல்பிண்டி மைதானம் போட்டி நடைபெறுவதற்கு பாதுகாப்பான இடமே என்று முடிவு செய்யப்பட்டது.






எனினும், பாகிஸ்தானில் நியூசிலாந்து வீரர்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை என நியூசிலாந்து அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகலும், ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் இருந்த பாதுகாப்பு ஆலோசகர்களின் ஆலோசனையின் தொடர்ச்சியாகவும், நியூசிலாந்து அணி சுற்றுப்பயணத்தை ரத்து செய்து கொள்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சார்பில் தரப்பட்டுள்ள விளக்கத்தில்,  “பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பும் கிரிக்கெட் வீரர்களுக்கு பல அடக்கு பாதுகாப்பை உறுதி செய்திருந்தது. பாகிஸ்தான் மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் திருப்தி அளிப்பதாக நியூசிலாந்து கிரிக்கெட் தெரிவித்திருந்து.






எனினும், கடைசி நிமிடத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் எடுத்த முடிவு அதிர்ச்சியாகவும், பல கோடி கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் அளித்துள்ளது” என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.