வருமானத்திற்கு அதிகமாக 654 % அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக கூறி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்கு பதிவு செய்திருக்கும் நிலையில், அவரது தொடக்க கால வாழ்க்கையையும் தற்போதைய நிலையையும் கணக்கிட்டால், பார்ப்பவர்களுக்கும் இதனை கேட்பவர்களுக்கும் தலைச்சுற்றும். அந்த அளவுக்கு சொத்து, சொகுசு பங்களா, ரோல்ஸ் ராய்ஸ் கார் என ஆடம்பர வாழ்க்கையை அனுபவித்து வருகிறார் கே.சி.வீரமணி.


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகேயுள்ள இடையம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர்தான் கே.சி.வீரமணி. சிறு வயதிலேயே பெரிய ஆளாக வரவேண்டும் என்று கனவு கண்டு, அதற்கான முயற்சிகளை முன்னெடுத்து அதில் வெற்றியும் பெற்றவர். இவரது தந்தை சின்னராசு ஜோலார்பேட்டை பகுதியில் ‘கே.கே.சின்னராசு அண்டு சன்ஸ்’ என்ற பெயரில் ‘பீடி’ தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தவர்.



எடப்பாடி பழனிசாமியுடன் கே.சி.வீரமணி


தனது தந்தையின் மறைவுக்கு பிறகு அவர் நிர்வகித்த ‘பீடி’ கம்பேனியை எடுத்து நடத்தி வந்தார் கே.சி.வீரமணி,  ஆனால், அதில் வரும் வருமானமும், அதன் மூலம் கிடைக்கும் செல்வாக்கும் தனக்கு போதாது என்று நினைத்தவர், அரசியல்தான் தனது கனவுகளை கரைசேர்க்கும் ’ஜீபூம்பா’ என்று நம்பினார். அதனால், 1994ல்அதிமுக விவசாய அணியில் சாதாரண அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டார்.


’பீடி கம்பேனி’, ‘அகல்யா டிரான்ஸ்போர்ட்’ போன்ற நிறுவனங்கள் நடத்தியதால் பலருக்கு பரிட்சியமான கே.சி.வீரமணிக்கு கட்சியில் சேர்ந்த சில மாதங்களிலேயே ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் பொறுப்பு கிடைத்தது. கிடைத்தது என்று சொல்வதைவிட அந்த பதவியை தனக்கு கிடைக்க வைத்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அதன்பிறகு, அதிமுகவில் வளர்வதற்கு சசிகலா குடும்பத்தின் தயவு தேவை என்று அறிந்த கே.சி.வீரமணி, அதனை பெற பிரயத்தனம் செய்து வெற்றி பெற்றார். அதனால், அடுத்தடுத்த உயர்வுகள் அவரை தேடி வரத் தொடங்கின.


2001-ஆம் ஆண்டு ஜோலார்பேட்டை சேர்மனாக ஆகிய கே.சி.வீரமணியை, வேலூர் மாவட்டத்தில் அதிமுக  பெரிய தோல்வியை சந்தித்த 2006 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஒருங்கிணைந்த வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆக்கினார் ஜெயலலிதா. எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத பதவி கிடைத்ததை நினைத்து திக்குமுக்காடினார் வீரமணி. கிடைத்த பொறுப்பை அதிமுகவில் தக்க வைப்பது அரிதிலும் அரிது. ஆனால், அதிர்ந்து கூட பேசாத வீரமணி அதனை இப்போது வரை தக்கவைத்து வேலூர் மாவட்டத்தையே ஆட்டி படைத்து வருவது ஆச்சர்யம் கலந்த உண்மை.


‘கல்யாண வீடுன்னா, நான் தான் மாப்பிளையா இருக்கனும், எழவு வீடுன்னா நான்தான் பொணமா இருக்கனும்’ என்ற எஜமான பட நெப்போலியன் வசனத்திற்கு ஏற்றார்போல், வேலூர் மாவட்டம் என்றாலே அது நானாகதான் இருக்கனும், நான் மட்டுமாகதான் இருக்கனும் என சகல அதிகாரங்களையும் பெறத் துடித்தார். அதன்படி, முதலில் ச.ம.உ ஆகவேண்டும் என்று தீர்மானத்தவர், 2011ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் ஜோலார்பேட்டையில் போட்டியிட சீட் வாங்கி, அதில் வெற்றியும்பெற்றார்.


 


அப்போது, அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் போயஸ்கார்டன் பக்கம் போன நிலையில், அமைச்சர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார் விஜய். இந்த சந்தர்பத்தை சரியான பயன்படுத்திக்கொண்ட கே.சி.வீரமணி, சசிகலா குடும்பத்தை கவனித்த கவனிப்பில், அவருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை அளித்தார் ஜெயலலிதா.


பெரிய ஆளாகி விடவேண்டும் என பிளான் போட்டு, பிராஜட் செய்தவருக்கு தமிழ்நாட்டிற்கே அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை எப்போதும் தக்க வைத்துக்கொள்ளும் தகவமைப்பு கொண்ட கே.சி.வீரமணி, அதில் சிறு பிசறும் நடக்காமல் பார்த்துக்கொண்டார். சில மாதங்களில் ‘பள்ளிக் கல்வித் துறை’ அமைச்சராக நியமிக்கப்பட்டார்.  அதன்பிறகு, மீண்டும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 2வது முறையாக அதே ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார் கே.சி.வீரமணி. இந்த முறை அவருக்கு வளம் கொழிக்கும் ‘வணிக வரி மற்றும் பத்திர பதிவு துறை’ அமைச்சர் பொறுப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை எல்லாம் சரியாக பயன்படுத்திக்கொள்ளத் தெரிந்த கே.வி.வீரமணிக்கு,  இந்த துறையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியாதா என்ன ?  பயன்படுத்திக்கொண்டார்.


2016 – 21 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறினார் கே.சி.வீரமணி ,  வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சென்னை மாவட்டங்கள் மட்டுமில்லாமல் கர்நாடக போன்ற வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பல கோடிக் கணக்கான சொத்துக்களை வாங்கிக் குவித்தார் என்ற குற்றச்சாட்டு  அவரை சுற்றத் தொடங்கியது.


மாவட்டத்தில் தனது கண்ணெட்டும் தொலைவு வரை எதிரிகளே இருக்கக் கூடாது என்ற நினைப்பில் இருந்த வீரமணி, அமைச்சராக இருந்து தனக்கு எதிராக தனது மாவட்டத்திலேயே அரசியல் செய்ய  துணிந்த நிலோபர் கபிலை கட்சியை வீட்டே நீக்க வைத்தார், முன்னாள் அமைச்சர் விஜய், கே..வீரமணியை எதிர்த்து அரசியல் செய்ய முடியாமல் திமுகவில் போய் ஐக்கியமானார்.


இப்படி கட்சியிலும், மாவட்டத்திலும் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்த கே.சி.வீரமணிதான், கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலில் 3வது முறையாக ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு வசதியாகிவிட்ட கே.சி.வீரமணியை அவரது சொந்த தொகுதி மக்களே தோற்கடித்தார்கள். இந்த தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத அவர் தனது மினி கூப்பர் காரை எடுத்துக்கொண்டும், ரோல்ஸ் ராய்ஸ் காரை ஓட்டிக்கொண்டும் அடிக்கடி இரவில் தனியாக வெளியே செல்லத் தொடங்கி, விடியற்காலையில்தான் வீடு திரும்பம் வழக்கத்தை சமீப காலமாக மேற்கொண்டு வந்தார்.


இந்த நிலையில்தான், அவரது வீடு அவருக்கு சொந்தமான இடங்கள் என மொத்தம் 35 இடங்களில் ரெய்டு நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை கணக்கில் வராத 34 லட்சம் ரொக்கம், 1.80 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம், ரோல்ஸ் ராய்ஸ்உள்பட 9 கார்கள், 5 கிலோ தங்க நகைகள், 7 கிலோ வெள்ளி நகைகளை பறிமுதல் செய்ததுடன், பதுக்கப்பட்டு வைத்திருந்த 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 275 யூனிட் மணலையும் பறிமுதல் செய்துள்ளனர்.


நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கே.சி.வீரமணி, கடந்த 10 ஆண்டுகளில் நினைக்க முடியாத அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது வேலூர் மாவட்ட மக்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.