டென்னிஸ் விளையாட்டுகளில் மிகவும் புகழ்பெற்ற கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்று ஆஸ்திரேலிய ஓபன் தொடர் ஆகும். ஆஸ்திரேலியாவில் நேற்று நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டியில் ஜோகோவிச் இளம் வீரர் சிட்சிபாஸசை வீழ்த்தி ஆஸ்திரேலியா ஓபன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார்.
அதிக கிராண்ட்ஸ்லாம்:
35 வயதான ஜோகோவிச் கைப்பற்றும் 10வது ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் இதுவாகும். இந்த பட்டத்தை கைப்பற்றியது மூலமாக உலகிலேயே அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றிய வீரர் என்ற ரபேல் நடால் சாதனையை நேற்று ஜோகோவிச் சமன் செய்தார். நடால் இதற்கு முன்பாக 22 கிராண்ட்ஸ்லாம் வென்றிருந்தார். நேற்றைய வெற்றியின் மூலம் ஜோகோவிச் அதனை சமன் செய்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி காரணமாக கடந்தாண்டு ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க ஜோகோவிச்சிற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், கடந்தாண்டு நடைபெற்ற தொடரில் அவர் பங்கேற்கவில்லை. டென்னிஸ் உலகில் பெடரரும், நடாலும் கோலோச்சி வந்த போது அதிரடியாக உள்ளே வந்து அவர்களையே வீழ்த்தும் அளவிற்கு வளர்ந்த வீரர்தான் ஜோகோவிச். கடந்த 2008ம் ஆண்டு அவர் தன்னுடைய முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றார்.
கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றுவதற்காக 33 முறை இறுதிப்போட்டிகளுக்கு சென்ற பெருமையும் ஜோகோவிச்சிற்கு உண்டு. அதில் 22 முறை பட்டங்களை கைப்பற்றி அசத்தியுள்ளார். முதன்முறையாக 2007ம் ஆண்டு அமெரிக்க ஓபனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஜோகோவிச் அந்த பட்டத்தை பெடரிடம் பறிகொடுத்தாலும், அடுத்தாண்டு ஆஸ்திரேலிய ஓபனை கைப்பற்றி தனது ஆதிக்கத்தை தொடங்கினார்.
2009 மற்றும் 2017ம் ஆண்டுகள் தவிர அனைத்து ஆண்டுகளிலும் அவர் ஏதாவத ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையாவது கைப்பற்றி அசத்தியுள்ளார்.
அத்தனையும் அத்துப்படி:
புகழ்பெற்ற விம்பிள்டன் பட்டத்தை 7 முறையும், அமெரிக்க ஓபன் பட்டத்தை 3 முறையும், பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 2 முறையும், ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 10 முறையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். அமெரிக்க ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் ஓபன், ஆஸ்திரேலிய ஓபன்களை கைப்பற்றிய பெருமைக்கு சொந்தக்காரர். இதில், 4 முறை இறுதிப்போட்டியில் நடாலையும், 4 முறை பெடரரையும் இறுதிப்போட்டியில் வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.
இந்தாண்டு எஞ்சியுள்ள கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றி நடால் சாதனையை முறியடிப்பாரா? என்பதையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். கிராண்ட்ஸ்லாம் காலண்டர் சாதனை படைக்கும் வாய்ப்பு அவருக்கு கடந்த 2021ம் ஆண்டு கிடைத்தது. ஆனால், ஆஸ்திரேலிய ஓபனில் தோற்றதால் அந்த சாதனைையை படைக்க இயலாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.