இந்த ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 29ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தற்போது இதற்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கிராண்ட்ஸ்லாம் தொடரில் முன்னணி வீரர் நோவக் ஜோகோவிச் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்து வந்தது. இவர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாததால் இந்த டென்னிஸ் தொடரில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் இருந்தது. 


இந்நிலையில் யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரிலிருந்து நோவக் ஜோகோவிச் விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், “இந்தாண்டு யுஎஸ் ஓபன் தொடரில் நான் பங்கேற்க நியூயார்க் பயணம் செய்ய முடியாது. எனக்கு ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் என்னுடைய நன்றி. இந்தத் தொடரில் பங்கேற்கும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். விரைவில் டென்னிஸ் களத்தில் சந்திப்போம்” எனப் பதிவிட்டுள்ளார். 






அவரின் இந்தப் பதிவு நீடித்து வந்த சந்தேகத்தை தெளிவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 3 முறை யுஎஸ் ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இவர் கடந்த யுஎஸ் ஓபன் தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தார். அந்தத் தொடரில் டேனியல் மெத்வதேவ் இடம் தோல்வி அடைந்தார்.


ஏற்கெனவே ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் நோவக் ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி செலுத்தாத காரணத்தால் விளையாட அனுமதிக்கப்படவில்லை. தற்போது அதைத் தொடர்ந்து யுஎஸ் ஓபன் தொடரிலும் இவர் விளையாடவில்லை. அமெரிக்காவில் தற்போது இருக்கும் விதிப்படி, அமெரிக்கர்கள் அல்லாத நபர்கள் அந்த நாட்டிற்கு நுழைய வேண்டும் என்றால் நிச்சயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அப்படி அவர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் அவர்களுக்கு விசா மறுக்கப்படும். 


 






கொரோனா தடுப்பூசிக்கு எதிரான நிலைப்பாட்டை ஜோகோவிச் எடுத்துள்ள காரணத்தால் அவர் கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை. டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரில் 21 பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச் தன்னுடைய 22வது பட்டத்தை எப்போது வெல்வார் என்று டென்னிஸ் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். யுஎஸ் ஓபன் தொடரில் நடப்புச் சாம்பியன் டேனியல் மெத்வதேவிற்கு போட்டியாக ரஃபேல் நடால் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.