கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 95 வயதான மர்யாம்மா கடந்த புதன்கிழமை மரணம் அடைந்தார். அவரது உடல் பிரீசர் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்தது. மர்யாம்மாவின் உடலை நடுவில் வைத்து அவரது உறவினர்கள் அனைவரும் சுற்றி நின்று சிரித்தபடி குரூப் ஃபோட்டோ எடுத்துக்கொண்டனர். அந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலானதுடன், எதிர்மறையான கருத்துக்கள் அதிக அளவில் பகிரப்பட்டன.
நடுவில் வைத்திருப்பது பிறந்தநாள் கேக் இல்லை என யாராவது சொல்லி புரியவைய்யுங்கள்' என்றும், 'இதென்ன காமெடி ஷோவா' எனவும், மரண வீட்டில் இருப்பவர்களின் முகங்களில் சந்தோஷத்தை பார்த்தீர்களா' என்பது போன்ற கமெண்டுகள் குவிந்தன. இந்த போட்டோ விவாதத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து மர்யாம்மாவின் உறவினர்கள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.
மர்யாம்மாவின் உறவினரான பாபு உம்மன் கூறுகையில், "அம்மச்சிக்கு 95 வயதாகி உள்ளது. இவ்வளவு காலமும் மகன்களோடும், மக்களோடும், மருமக்களோடும், பேரக் குழந்தைகளோடும் மிகவும் நேசத்தோடு இருந்தார். அனைவரும் அவருடைய அன்பை அனுபவித்தோம். கடந்த ஒரு வருடங்களாக படுத்த படுக்கையாகி விட்டார். கடந்த புதன் கிழமை மரணம் அடைந்துவிட்டார். அம்மச்சியின் நல்ல நினைவுகள் மட்டுமே எங்களுக்கு இருந்தது. அந்த மகிழ்ச்சியை நினைத்து பார்த்தோம். அந்த சந்தோஷத்தை நினைவாக வைத்துக் கொள்ளவே குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டோம். வைரலாவுவதற்காக அந்த போட்டோவைநாங்கள் எடுக்கவில்லை.
மர்யாம்மாவுக்கு ஒன்பது பிள்ளைகள். அதில் ஒருவர் இறந்துவிட்டார். மற்ற பிள்ளைகளிம், மருமக்களும், பேரக்குழந்தைகளும் ஒன்றாக கிறிஸ்தவ நம்பிக்கைபடி பிரார்த்தனை செய்துகொண்டிருந்தோம். பிரார்த்தனைக்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை அடக்கம் செய்வதற்கு முன்பு அதிகாலை 2.15 மணிக்கு எடுத்த புகைப்படம்தான் அது. அதுவும் குடும்ப உறுப்பினர்கள் 'நமக்கு ஒரு போட்டோ எடுத்து வைக்கலாம்' என விரும்பியதாலதான் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. மற்றபடி எதிர்பாராத நேராத்தில் எடுக்கப்பட்ட போட்டோ அல்ல" என்றார்.
"மரண வீட்டில் அழுகையை மட்டும் பார்த்தவர்களுக்கு இந்த போட்டோவை ஏற்றுக்கொள்ள முடியாது. அழுது எந்த பயனும் இல்லை. மீண்டும் பாக்கலாம் எனக்கூறி வழியனுப்பி வைக்க வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்தோம். அம்மச்சியின் உடல் அருகே எங்கள் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 35 பேர் பிரார்த்தனை செய்துகொண்டு இருந்தோம். மகன்தான் போட்டோ எடுக்கச் சொன்னார். குடும்ப வாட்ஸ் அப் குரூப்பில் ஷேர் செய்த போட்டோ வெளியே பரவியதுடன், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மர்யாம்மாவின் கணவர் சி.எஸ்.ஐ போதகராக இருந்தார். அவரது சகோதரனும் போதகர்தான். ஒரு மகன் பிஷப்பாகவும், மற்றொரு மகன் போதகராகவும் உள்ளனர். அவரின் இரண்டு மருமகன்கள் போதகராகவும், ஒரு மருமகன் பிஷப்பாகவும் உள்ளார். அப்படி போதகர்களுடன் தொடர்பில் உள்ள குடும்பத்தினர் என்பதால் இறுதிவரை பிரார்த்தித்துக்கொண்டிருந்தோம் " என்கிறார்கள் குடும்ப உறுப்பினர்கள்.
இந்த போட்டோவை கேரள கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டியும் ஷேர் செய்திருந்தார். "வாழ்வின் இறுதியான உண்மை மரணம் மட்டுமே. இறந்தவர்களை அழுதுகொண்டே வழியனுப்பி வைப்பதைதான் சாதாரணமாக நாம் பார்கிறோம். மரணம் ஒரு பிரிவும், சங்கடகரமானதும் ஆகும். ஆனலும், அது ஒரு விடைபெறுவதும், வழியனுப்புவதும் ஆகும். மகிழ்ச்சியோடு வாழ்ந்தவர்களுக்கு, புன்சிரிப்போடு ஒரு வழியனுப்புதல் செய்வதைவிட சந்தோஷமானது வேறு ஏதாவது உண்டா? இந்த போட்டோவுக்கு நெகட்டிவ் கமெண்டுகள் வேண்டாம்" என அமைச்சர் வி.சிவன்குட்டி கூறியிருந்தார்.