Novak Djokovic: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அரையிறுதிப் போட்டியில், உலகின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி ஜான்னிக் சின்னர் வெற்றி பெற்றுள்ளார்.
ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், உலகின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் தோல்வியடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்துள்ளார். இத்தாலியை சேர்ந்த ஜானிக் சின்னரிடம், ஜோகோவிச் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த போட்டியில் ஜோகோவிச் 1-6, 2-6, 7-6 மற்றும் 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் இரண்டாயிரத்து 195 நாட்களுக்குப் பிறகு அவர் தோல்வியை சந்தித்துள்ளார். 2008 ஆம் ஆண்டில் ஜோகோவிச்சிற்குப் பிறகு ஆஸ்திரேலிய ஓபனில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு நுழைந்த இளம் வீரர் என்ற பெருமையையும் சின்னர் பெற்றுள்ளார். 25வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்திற்கான ஜோகோவிச்சின் காத்திருப்பு தொடர்வதோடு, 11வது ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்லும் அவரது கனவும் தகர்ந்துள்ளது. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியை எட்டியபிறகு ஒருமுறை தோற்றதே இல்லை, என்ற வெற்றி பயணமும் முடிவுற்றுள்ளது.
யார் இந்த சின்னர்?
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஜோகோவிச் தொடர்ச்சியாக 33 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவரை வீழ்த்திய 22 வயதே ஆன சின்னர் ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இத்தாலியின் முதல் வீரர் என்ற பெருமையை சின்னர் பெற்றுள்ளார். உலக ஆடவர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ள சின்னர், கடந்த 9 வாரங்களில் ஜோகோவிச்சை மூன்றாவது முறையாக வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, ஜனவரி 28ம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில், சின்னர் ரஷ்ய வீரர் டேனியல் மெத்வெதேவ் அல்லது அலெக்சாண்டர் ஸ்வ்ரெவ்வை எதிர்கொள்கிறார்.