தைப்பூசம்:
தை மாதத்தில் பௌர்ணமி திதியும், பூச நட்சத்திரமும் வரும் நாளே தைப்பூசம் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்கள் உள்பட பெரும்பாலான கோயில்களில் தைப்பூச கொண்டாட்டம் ஏற்கனவே கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூசம் என்பதால், கடந்த ஒரு வாரமாகவே பக்தர்கள் கூட்டம் முருகன் கோயில்களில் அதிகளவு காணப்பட்டது.
பக்தர்கள் விரதம்:
தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் கோயில்களுக்கு பாத யாத்திரையாகவோ அல்லது வாகனங்களிலோ சென்று வேண்டுதலை நிறைவேற்றுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், காவடி எடுத்தும், வேல் குத்தியும் தங்களது விரதத்தை நிறைவேற்றுவார்கள். தைப்பூச திருநாளில் முருகப்பெருமானுக்குரிய கந்தசஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி மற்றும் திருப்புகழ் ஆகிய பாடல்களை கோயில்களில் பக்தர்கள் பாராயணம் செய்வது வழக்கம் ஆகும். தமிழ்நாட்டில் மட்டுமின்றி மலேசியாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற முருகன் கோயிலிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவில்களில் குவிந்த பக்தர்கள்
நேற்று தமிழ்நாடு முழுவதும் நடந்த தைப்பூச விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். இதன் காரணமாக அனைத்து முருகர் கோவில்கள் சிவன் கோவில்கள் தைப்பூசம் விழா நடைபெறும் கோவில்களில் பக்தர்கள் அலைமோதினர். பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெற்றது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு சென்றனர்.