பிரபல பின்னணி பாடகி பவதாரிணி உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவருடைய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 


இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பவதாரிணி நேற்று கல்லீரல் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். தனது தனித்துவமான குரலால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள அவர் பாடகி, இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவராக உள்ளார். தமிழில் பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ள பவதாரிணி சபரிராஜ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு  தொடர்ந்து படங்களில் பாடி வந்தார். 


இதனிடையே பவதாரிணி பித்தப்பையில் கல் இருப்பதாக சிகிச்சைக்கு சென்ற நிலையில், அவருக்கு கல்லீரல் புற்றுநோய் அபாய கட்டத்தில் இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது.  இதுதொடர்பான சிகிச்சைக்கு இலங்கை சென்ற நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். பவதாரிணி மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் பாடிய வீடியோக்கள், நேர்காணல் பேச்சுகள் என அனைத்தும் இணையத்தில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.


இப்படியான நிலையில், யுவன் ஷங்கர் ராஜா சினிமாவிற்கு இசையமைக்க வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் யுவனின் அப்பாவும் இசையமைப்பாளருமான இசைஞானி இளையராஜா, அண்ணன் கார்த்திக் ராஜா, தங்கை பவதாரிணி ஆகியோர் பங்கேற்றனர். 


அப்போது பேசிய இளையராஜா, ‘நாங்க 4 பேரும் ஒரே மேடையில் பார்க்குறதுக்கு எங்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது’ என சொல்லியிருப்பார். அதற்கு பதில் சொல்லும் யுவன், ‘அப்பா எனக்கு இந்த நிகழ்ச்சியில் கொடுத்த முத்தம் தான் முதல் முத்தம்’ என கூறுவார். இதனைக் கேட்டு இளையராஜா ஜாலியாக, ‘அடி உதை கிடைக்கும் பாத்துக்க...அப்படியெல்லாம் முதல் தடவை இல்ல’ என கூறுவார். உடனே அருகில் நிற்கும் பவதாரிணி  அப்பாவுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் அதெல்லாம் இல்லை என யுவனிடம் சண்டைக்கு செல்வார். 






தொடர்ந்து பேசும் பவதாரிணி, ‘அப்பா அம்மா ஊருக்கு போயிருந்தாங்க. யுவன் ரொம்ப சோகமாக பியானோ மீது கைவைத்து, “டாடி மம்மி இப்போ எங்க போயிருக்காங்க சொல்லு சொல்லு.. நீ இப்ப சொல்ல போறியா இல்லாட்டி நான் அழுகட்டா” என பாடிய நிகழ்வை ஜாலியாக தெரிவித்திருப்பார். உடனே இளையராஜா “நான் அழுவேன்” என அந்த வரியை மாற்றி பாடுவார். அந்த வார்த்தையை குறிப்பிட்டு மகளின் பிரிவை இளையராஜா எப்படி எடுத்துக் கொள்ள போகிறார் என்றும், அவருக்கு அதற்கான பலத்தை கடவுள் கொடுக்க வேண்டும் எனவும் பலரும் தெரிவித்து வருகின்றனர்.