பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் முதல்நிலை வீரர் நோவக் ஜோகாவிச் மற்றும் தரவரிசையில் மூன்றாம் வீரரும் நடப்புச் சாம்பியனுமான ரஃபேல் நடால் ஒரு அரையிறுதிப் போட்டியில் மோதினர். இரு பெரும் ஜாம்பவான் வீரர்கள் மோதியதால் இந்தப் போட்டியின் மீது ரசிகர்களுக்கு அதிகளவில் ஆர்வம் ஏற்பட்டது. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே இரு வீரர்களும் மாறி மாறி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
பிரஞ்சு ஓபன் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வந்த ரஃபேல் நடால் இம்முறையும் இறுதிப் போட்டிக்கு சென்று பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆட்டத்தின் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் நடால் வென்றார். அதன்பின்னர் சுதாரித்து கொண்ட ஜோகோவிச் இரண்டாவது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். இருவரும் தலா ஒரு செட் வென்று இருந்த சூழலில் மூன்றாவது செட் மிகவும் விறுவிறுப்பாக சென்றது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் மூன்றாவது செட் டைபிரேக்கருக்கு சென்றது. அதில் 7-6 என்ற கணக்கில் ஜோகோவிச் வென்றார். பின்னர் நான்காவது செட்டை 6-2 என்ற கணக்கில் எளிதாக ஜோகோவிச் கைப்பற்றி 3-6,6-3,7-6,6-2 என்ற கணக்கில் நடாலை வீழ்த்தினார். கிட்டதட்ட 4 மணி நேரம் 10 நிமிடங்கள் வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் வென்றார்.
இந்தப் போட்டி டென்னிஸ் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்தது. பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் ரஃபேல் நடால் அடையும் மூன்றாவது தோல்வி இதுவாகும். அதில் இரண்டு முறை பிரஞ்சு ஓபனில் அவர் ஜோகோவிச் இடம் தோல்வி அடைந்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு ஜோகோவிச் பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரை வென்று இருந்தார். அதன்பின்னர் தற்போது இரண்டாவது முறையாக வெல்லும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. மேலும் பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் 6ஆவது முறையாக ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
மற்றொரு அரையிறுதிப் போட்டியில் கிரேக்க நாட்டின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் மற்றும் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் ஆகியோர் மோதினர். இந்தப் போட்டியும் மிகவும் விறு விறுப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் முதல் இரண்டு செட்களை சிட்சிபாஸ் 6-3,6-3 என்ற கணக்கில் வென்றார். இதனைத் தொடர்ந்து சுதாரித்து கொண்டு ஆடிய ஸ்வெரவ் அடுத்த இரண்டு செட்களை 6-4,6-4 என்ற கணக்கவில் வென்றார். இதன் காரணமாக ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்க கடைசி மற்றும் ஐந்தாவது செட் நடைபெற்றது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிட்சிபாஸ் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி போட்டியை வென்றார். சுமார் 3 மணி நேரம் 37 நிமிடம் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றிப் பெற்று சிட்சிபாஸ் முதல் முறையாக பிரஞ்சு ஓபன் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் முதல்நிலை வீரர் ஜோகோவிச் மற்றும் சிட்சிபாஸ் மோத உள்ளனர். ஜோகோவிச் மற்றும் சிட்சிபாஸ் இதுவரை 7 முறை மோதியுள்ளனர். அதில் 5 முறை ஜோகோவிச் மற்றும் 2 முறை சிட்சிபாஸ் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் களிமண் டென்னிஸ் தொடர்களில் இதுவரை இவர்கள் 3 முறை மோதியுள்ளனர். அதில் 3 முறையும் ஜோகோவிச் வெற்றி பெற்றுள்ளார். இதனால் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியிலும் ஜோகோவிச் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க:”தோனியின் நட்பால்தான் எனக்கு அணியில் இடம் கிடைத்தது. ஆனால்..” : வருத்தத்தில் சுரேஷ் ரெய்னா!