நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளரும் சாட்டை யூட்யூப் தளத்தை நிர்வகித்துவருபவருமான யூ-டியூப் பதிவர் துரைமுருகன் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார். 



சாட்டை துரைமுருகன்


திருச்சியில் ’சமர் கார் ஸ்பா என்ற’ பெயரில் வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் வினோத் என்பவர் விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறாக கருத்து பதிவிட்டதாக கூறி, சாட்டை துரைமுருகன் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் அவரது கடைக்கே சென்று, பிரபாகரன் குறித்த பதிவிற்காக வினோத்தை மன்னிப்பு கேட்க வைத்து, அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். 









வினோத்தின் கடை மூடப்பட்டுவிட்டதாகவும், அவர் மனநலம் சரியில்லாதவர்கள் என்றும் நாம் தமிழர் கட்சியினர் பலர் தங்களது ட்விட்டரில் பதிவிடத் தொடங்கினர்.









சாட்டை துரைமுருகன் தனது ட்விட்டர் பக்கத்தில், ’தமிழ் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களை அவதூறாக பேசிய திருச்சி சமர் கார் ஸ்பா நிறுவனத்தை சார்ந்த வினோத் என்பவர் புரிதல் பிழையால் பேசிவிட்டேன் என மன்னிப்பு கேட்டதை அடுத்து அவருக்கு அறிவுரை கூறி விடை பெற்றோம் என பதிவிட்டு’, வினோத் மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.


இதற்கு திமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நாம் தமிழர் கட்சியினருக்கும் சாட்டை துரைமுருகனுக்கும் ஒருவரை போலீசார் முன்னிலையிலேயே மிரட்டி வீடியோ எடுக்கும் தைரியம் எங்கிருந்து வந்தது ? தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கையை காவல்துறையும் அரசும்தான் எடுக்க வேண்டும், தண்டனை கொடுக்க இவர்கள் யார் ? என திமுக மற்றும் திமுக ஆதரவாளர்கள் சாட்டை முருகனுக்கு எதிராக அடுத்தடுத்து ட்வீட்களை தட்டி சாட்டையை சுழற்றியபடியே இருந்தனர்.






வினோத்தை மிரட்டி, வீடியோ எடுத்த சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் மீது ஆளுங்கட்சியாக இருந்தும் கூட, நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பது வேதனை அளிக்கிறது என உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரையெல்லாம் டாக் செய்து அவர்கள் பதிவிட்டவண்ணமே இருந்தனர்.






இந்நிலையில் வினோத்தும் திருச்சி கே.கே.நகர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார் அதில் ‘தன் கடைக்கு வந்த சாட்டை துரைமுருகன், சரவணன் உள்ளிட்டோர் தகாத வார்த்தைகளில் தன்னை தொலைபேசி மூலம் அழைத்து திட்டியதாகவும், பின்னர் கடைக்கு சென்றபோது கொலைவெறியுடன் தாக்க முயன்றதாகவும், தான் தப்பிச் செல்லாமல் அங்கிருந்தால் நிச்சயம் அவர்கள் தன்னை கொலை செய்திருப்பார்கள் என்றும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்’.



வினோத் புகார் மனுவின் ஒரு பக்கம்


இப்படி திமுகவினர், தலைமை மீது அதிருப்தி தெரிவித்து போஸ்ட் போட்டுக்கொண்டிருந்த நிலையில், திருச்சி மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.அருண் மற்றும் திமுக வழக்கறிஞர் அணியினர், இது குறித்து  விசாரிக்கத் தொடங்கி, சாட்டை துரைமுருகன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கினர்.






அதன்பிறகுதான், சாட்டை துரைமுருகன், வினோத், சந்தோஷ், சரவணன் உள்ளிட்ட 4 பேரையும் இரவில் கைது செய்தது திருச்சி கே.கே.நகர் காவல்துறை. இந்த நான்கு பேர் மீதும் மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் (143 ,447, 294(b), 506(2), 147 of IPC) வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.